

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கமாண்டோ பள்ளி காவல் ஆய்வாளரின் படத்துக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர்.
சென்னை அடையாறு, மருதம் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜோனதன் பிரான்சிஸ் (53). கடந்த 18-ம் தேதி அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
இந்நிலையில், மருதம் கமாண்டோ பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மறைந்த காவல் ஆய்வாளர் ஜோனதன் பிரான்சிஸின் படத்துக்கு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, தமிழக கமாண்டோ (ஆபரேஷன்ஸ்) கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.ஜெயந்த் முரளி, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.