தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு மாற்றுப்பாதை கோரி மீனவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு மாற்றுப்பாதை கோரி மீனவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
Updated on
1 min read

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு மாற்றுப்பாதை அமைத்துத் தரக்கோரி இரையுமன்துறையில் மீனவர்கள் இன்று குடும்பத்துடன் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இரையுமன்துறை மீனவ கிராமத்தில் உள்ள ஊராட்சி சாலை வழியாக தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் வசிப்பிடங்களிடையே அதிக அளவில் செல்வதால் மக்களுக்கு விபத்து ஏற்படுவதுடன், அப்பகுதியில் உள்ள வீடுகளும் அதிர்வினால் சேதமாகி வருகின்றன.

எனவே தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்ல தாமிரபரணி ஆற்றின் கரையோரம் புதிதாக மாற்றுப்பாதை அமைக்கவேண்டும். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் படகுகள் அடித்துச் செல்வதைத் தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.

இரையுமன்துறை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவுகள் அமைகக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இரையுமன்துறை புனித லூசியாஸ் ஆலயம் முன்பு மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

உண்ணாவிரதத்திற்கு பங்குத்தந்தை ரெஜீஸ்பாபு தலைமை வகித்தார். இதில் இரையுமன்துறையை சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதம் இருந்த மீனவர்களிடம் வருவாய்த்துறையினர், மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் இரவிலும் அப்பகுதியிலே மீனவர்கள் படுத்தவாறு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாரிகள் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் மீனவர்களின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. தங்களது கோரிக்ககைளை அரசு தரப்பில் ஏற்றகொண்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்.

இல்லையேல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in