Last Updated : 25 Aug, 2020 06:58 PM

 

Published : 25 Aug 2020 06:58 PM
Last Updated : 25 Aug 2020 06:58 PM

அரசுப் பேருந்து வழித்தடத்தில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்க அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தினர். படம்: ஜெ.ஞானசேகர்.

திருச்சி

அரசுப் பேருந்து வழித்தடத்தில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்க அனுமதிக்கும் அரசாணை விதி எண் 288ஏ-வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன் இன்று (ஆக.25) தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், ஹெச்எம்எஸ், ஏஏஎல்எல்எப், எம்எல்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் கடந்த மாதம் 24-ம் தேதி உண்ணாவிரதத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டவாறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும், பாதுகாப்பு வசதிகளுடன் பொதுப் போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும், மோட்டார் வாகனச் சட்டத்துக்குப் புறம்பாக வெளியிடப்பட்ட அரசாணை விதி எண் 288ஏ-வைத் திரும்பப் பெற வேண்டும், தனியாரிடம் பேருந்தை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவைக் கைவிட வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும், அகவிலைப்படி உள்ளிட்ட பண நிலுவைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டம் குறித்து சிஐடியு திருச்சி மண்டல பொதுச் செயலாளர் எம்.கருணாநிதி கூறும்போது, "அரசுப் போக்குவரத்துக் கழகத்திடம் தற்போது 24 ஆயிரம் வழித்தடங்கள் உள்ளன. இதில், 22 ஆயிரம் வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தில் 8,000 பேருந்துகளை இயக்கத் தகுதியற்றதாக அறிவித்து, மொத்தமாக 10 ஆயிரம் வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவருகிறது. இது தொடர்பாக மாநிலத் தலைமையின் அறிவிப்புக்கேற்ப அடுத்தடுத்து போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்" என்றார்.

தொமுச திருச்சி மண்டல பொதுச் செயலாளர் குணசேகரன் கூறும்போது, "அரசுப் போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் மயமாக்க ஜெயலலிதா முடிவு செய்தபோது, அதை மு.கருணாநிதி எதிர்த்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியர்கள் ஆக்குவோம் என்றார். ஜெயலலிதாவின் அதே கொள்கையை தற்போதைய அதிமுக அரசும் எடுத்துள்ளது. பல்வேறு போராட்டங்கள் மூலம் பல்வேறு கோரிக்கைகளைத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வென்றதுபோல், இந்தக் கோரிக்கையையும் வெல்வோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x