

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே.எம்.காதர் மொகிதீன் (80), முழு குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் (80). இவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஆக.3-ம் தேதி, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, மருத்துவர் விவேக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்குத் தனிக் கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் கரோனாவில் இருந்து முழுமையாகக் குணமடைந்து, நேற்று (ஆக.24) காதர் மொகிதீன் வீடு திரும்பினார்.
"மருத்துவர்கள் அறிவுரையின்பேரில் 15 நாட்கள் வரை காதர் மொகிதீன் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதால், அவரை யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம்" என்று கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காதர் மொகிதீனை செல்போனில் இன்று (ஆக.25) தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.