

மக்களை நேரடியாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறை கூறுவது தவறு. இலவச கிசிச்சை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து மத்திய அரசுக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இச்சூழலில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சட்டத்தை மீறுவோர் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார். சில கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துவதாகவும், பொறுப்பற்றோரையும் அரசு நிர்வகிக்க வேண்டியதாக கடுமையாக கிரண்பேடி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி பாஜக மாநிலத்தலைவரும், எம்எல்ஏவுமான சாமிநாதன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஆக.25) வெளியிட்ட அறிக்கை:
"மக்களை நேரடியாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறை கூறுவது தவறு. மக்களுக்கு வழிகாட்ட வேண்டியது அரசும், ஆளுநரும்தான். மத்திய அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாக ஆளுநரின் கருத்து அமைகிறது.
ஏழை, நடுத்தர மக்கள் தொடர்ந்து பல மாதங்களாக வருமானமின்றி பொருளாதாரச் சிக்கலுடன் கரோனா நோய் தொற்று பயத்தில் தடுமாறிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இலவச சிகிச்சையை எப்படிக் கேட்க முடியும் என்ற ஆளுநரின் கருத்து தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாக உள்ளது.
இலவச மருத்துவத்தை இல்லாது செய்தால் என்ன செய்வது என்று பேசுவது ஏற்புடைய செயல் அல்ல. இது பிரதமரையும் மத்திய அரசையும் பெருமைப்படுத்தும் செயலும் அல்ல.
பிரதமர் தொடங்கி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையை புதுச்சேரி அரசு செலுத்தவில்லை. புதுச்சேரியில் 1.03 லட்சம் பேர் பயனாளிகளாக உள்ளனர். 38 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஆயுஷ்மான் பாரத் திட்டம் காப்பீடு அட்டை தரப்பட்டது. மாநில அரசு இத்திட்டக் காப்பீட்டில் பங்குத் தொகையும் செலுத்தவில்லை.
புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் முடங்கியுள்ளது. புதுச்சேரி அரசு தனது பங்குத்தொகையைச் செலுத்த வேண்டும். இதுபற்றி பிரதமர், மத்திய உள்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்".
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.