

அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகவும், ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இனி 'கிங்'காகத்தான் இருக்க வேண்டும், தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் எனவும், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஆக.25) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனித்துப் போட்டியிடுவது குறித்துத் தெரிவித்துள்ளாரே?
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக அமைத்த கூட்டணி தொடர்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அவர்களின் கட்சியின் கருத்தை அவர் கூறியிருக்கிறார். இதனைக் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை, லட்சியம் உண்டு. அதனை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் சூழ்நிலையில்தான் அதிமுக இருக்கின்றது. தேர்தலின்போதுதான் கூட்டணி குறித்துச் சொல்ல முடியும். இப்போது கூட்டணியில் பிரச்சினை இல்லை.
அதிமுக வலுவிழந்துவிட்டதா?
அதிமுக மாபெரும் இயக்கம். ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உழைப்போம். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா காலத்தில் இருந்த பலத்துடன் அதிமுக தற்போதும் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லலாம். அந்தக் கருத்தைச் சொல்வதாலேயே நாங்கள் பலவீனமடைந்துவிட்டதாகக் கருத முடியாது. எங்களின் தலைமையில்தான் கூட்டணி அமையும். சின்ன சின்னப் பிரச்சினை இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அவை சரியாகிவிடும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.