

மக்கள் பிரச்சினைகளுக்காக இயக் கங்களை நடத்தி வரும் மக்கள் நல கூட்டு இயக்கம், தேர்தலிலும் இணைந்தே போட்டியிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி நீதிமன்றம் அருகே நேற்று திறக்கப்பட்ட வஉசி சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோடி தலைமையிலான பாஜக அரசில், கடந்த 15 மாதங்களில் என்னென்ன செய்தோம் என்று கடந்த 3 நாட்களாக ஆர்எஸ்எஸ் தலைவர்களைச் சந்தித்து விளக்கி வருகின்றனர். இது, அரசிய லமைப்புச் சட்டத்துக்கு விரோத மானது. ஆர்எஸ்எஸ் வழிகாட்டு தல்படி மோடி அரசு செயல்படுகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
சென்னையில் விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற இலங்கை தமிழ் அகதி, இறந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கம் என்ற பெயரில், தமிழக மக்களின் முக்கிய 15 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல இயக்கங்களை நடத்தி வருகிறது. மக்கள் பிரச்சி னைகளுக்காக இயக்கங்கள் நடத்துவது மட்டுமின்றி தேர்தலி லும் நாங்கள் இணைந்தே போட்டி யிடுவோம். அதிமுக- திமுக இல் லாத அணியே எங்களது நோக்கம்.
2011-க்குப் பிறகு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை நிறை வேற்றப்படவில்லை எனக் கூறப் படுகிறது. சட்டப்பேரவைக் கூட்டம் ஜனநாயகப்படி நடைபெறவில்லை.
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கக்கூடாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, பொன்மலை தியாகிகள் தினத்தையொட்டி அங்குள்ள நினைவுத் தூணுக்கு ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். அங்கு செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும்போது, “தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம்” என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரி வித்தார்.