

கரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியிருந்த ஜவுளித்தொழில், இ-பாஸ் தளர்வு காரணமாக 25 சதவீதம் விற்பனையை எட்டியுள்ளதாக ஈரோடு ஜவுளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா நோய்த்தொற்றினைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக, ஈரோட்டின் முக்கிய வர்த்தகமாக உள்ள ஜவுளித்தொழில் முடங்கியது. ஊரடங்கில் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்திற்கான தடை மற்றும் இ-பாஸ் கட்டுப்பாடுகள் காரணமாக வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் வருகை தடைபட்டது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஜவுளி வியாபாரிகளுக்கு பெரிய பலன் கிடைக்கவில்லை. இணையதளம், சமூக வலைதளம் போன்றவற்றின் மூலம் ஜவுளிவகைகளை விற்பதற்கு வியாபாரிகள் எடுத்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறையைக் கொண்டு வந்ததால், ஜவுளி விற்பனை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, சரக்கு போக்குவரத்திற்கு அனுமதி இருந்தாலும், வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை தற்போதைய தளர்வால் மாறியுள்ளது. தற்போதைய இ-பாஸ் தளர்வால், ஈரோடு வரும் வெளிமாவட்ட வியாபாரிகள், தங்களுக்குத் தேவையான ஜவுளிவகைகளைத் தேர்வு செய்து கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த 6 மாதமாக முடங்கியிருந்த ஜவுளித்தொழில் தற்போது, 25 சதவீதம் விற்பனையைத் தொட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு கனிஜவுளிச்சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
ஈரோடு ஜவுளிசந்தையில் லுங்கி, துண்டுகள், போர்வைகளில் தொடங்கி அனைத்து வயதினருக்குமான ஜவுளிரகங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், பல்வேறு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக ஜவுளிகளைக் கொள்முதல் செய்து வருகின்றனர். கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதமாக ஜவுளி உற்பத்தியில் தொடங்கி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என அனைத்தும் முடங்கியுள்ளது.
கனிஜவுளிச்சந்தை வாரச்சந்தையில் 740 கடைகள் கடந்த 7 மாதங்களாக இயங்கவில்லை. 330 தினச்சந்தையில் 5 சதவீதம் கூட விற்பனை இல்லை. சில தளர்வுகளால் ஆன்லைன் விற்பனை மற்றும் சில்லறை வியாபாரம் மட்டும் 5 சதவீதம் நடந்து வந்தது.
ரம்ஜான், பக்ரீத், ஆடி 18, ஓணம் உள்ளிட்ட பண்டிகைகாலங்கள் மற்றும் கோடை, குளிர்காலத்திற்கு ஏற்ற ஆடைகள் என கோடிக்கணக்கில் நடக்கும் ஜவுளி வர்த்தகம் இந்த ஆண்டு நடக்கவில்லை. ஞாயிறு முழு ஊரடங்கால் உள்ளூர் விற்பனையும் முடங்கி வருகிறது. தற்போதைய இ-பாஸ் தளர்வால் 25 சதவீதம் விற்பனை தொடங்கியுள்ளது. இருப்பினும், இதுவரை வெளிமாநில வியாபாரிகள் வராத நிலையே தொடர்கிறது. தற்போதைய நிலையில் தீபாவளிப் பண்டிகை விற்பனையை மட்டுமே எதிர்பார்த்துள்ளோம். ரயில், பேருந்து சேவைகளுக்கும் விரைவில் அரசு அனுமதி அளித்தால் மட்டுமே ஜவுளி வர்த்தகம் முழுமையாக நடக்கும், என்றார்.