

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி, மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் அருகேயுள்ள ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது ஒன்றரை வயது குழந்தை மலர்விழிக்கு, கடந்த 18-ம் தேதி நிலக்கடலை சாப்பிடும்போது புரை ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, மேல்சிகிச்சைக்காக 19-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
குழந்தைக்கு எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் செய்து பார்த்ததில், மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், உடனடியாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு, காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் ஏ.ஆர்.அலி சுல்தான் தலைமையிலான மருத்துவக் குழுவினர், உள்நோக்கு கருவி மூலம் மூச்சுக்குழாயில் இருந்த நிலக்கடலையை அகற்றினர்.
இதுகுறித்து டாக்டர் அலி சுல்தான் கூறும்போது, "மூச்சுக்குழாய் அடைப்பை சரிசெய்யாமல் இருந்திருந்தால், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். எப்போதும், குழந்தைகள் சாப்பிடும்போது பேச்சுக் கொடுக்கவோ, சிரிப்பு காட்டவோ கூடாது. அவ்வாறு செய்தால் சாப்பிடும் பொருள் தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் சென்று, அடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறல் வர வாய்ப்புள்ளது. குழந்தையின் மூச்சுக்குழாயின் விட்டம் 5 மி.மீ. அளவில்தான் இருக்கும்.
உணவுப் பொருள் அடைத்தபின்பு, அது பெரிதாகி அடைப்பும் அதிகமாகும். நிலக்கடலை, பட்டாணி, மக்காசோளம், சிறு கற்கள் போன்றவற்றை குழந்தைகள் வாயில் போட்டுக்கொள்ளாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இயல்பாக உள்ள குழந்தைக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால், மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்" என்றார்.