அழிவின் விளிம்பில் காங்கயம் இன மாடுகள்!- ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்காக கொண்டுசெல்வது அதிகரிப்பு

அழிவின் விளிம்பில் காங்கயம் இன மாடுகள்!- ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்காக கொண்டுசெல்வது அதிகரிப்பு

Published on

அழிவின் விளிம்பில் உள்ள காங்கயம் இன மாடுகளை, ஊரடங்குகாலத்தில் இறைச்சிக்காக கொண்டுசெல்வது அதிகரித்துள்ளதாக புகார் தெரிவிக்கும் தன்னார்வலர்கள், இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மாட்டு இனங்களில் காங்கயம் இன மாடுகள் தனிச் சிறப்பு பெற்றவை. தென்னிந்தியாவின் அடையாளமாக கருதப்படும் இவை, அதிக பாரம் இழுக்கும் திறன் கொண்டவை. கடும் வெயில்,பஞ்ச காலத்திலும், வேம்பு இலை,பனையோலை, கரும்புத்தோகை என கிடைப்பதை உண்டு, உயிர்வாழும் தன்மை கொண்டவை. 1940-களில் சுமார் 34 லட்சமாக இருந்த காங்கயம் மாடுகளின் எண்ணிக்கை 1990-களில் 8 லட்சமாகவும், 2004-ம் ஆண்டில் 4 லட்சமாகவும் குறைந்துவிட்டது.

இதையடுத்து, இவற்றைப் பாதுகாக்க கொங்கு மண்டலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2015-ல் தொடங்கப்பட்ட காங்கயம் பழையகோட்டை பட்டக்காரர் கால்நடை ஆராய்ச்சி மையம், மாடு வளர்ப்போருக்காக பிரத்யேக சந்தைகள் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண் டது.

மாட்டுச் சந்தை மூடல்

இந்நிலையில், கரோனா ஊரடங்கால் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்ட சூழலில், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கான விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதனால், இடைத்தரகர்கள்,வியாபாரிகள் பலர், கொங்குமண்டல மாவட்டங்களிலிருந்து மாடுகளை வாங்கிச் சென்று, இறைச்சிக்குப் பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து காங்கயம் பழையகோட்டை பட்டக்காரர் கால்நடை ஆராய்ச்சி மைய நிர்வாக அறங்காவலர் வி.சிவக்குமார் `இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

1996-ல் அமெரிக்காவில் உயர்கல்வி கற்று, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிக்குச் சேர்ந்த நான், 2013-ல் இந்தியா திரும்பினேன். அப்போது சீமை மாடுகள் மற்றும் கலப்பின மாடுகளின் வரவால், நாட்டு மாட்டினமான காங்கயம் ரகம் அழிந்து வருவது தெரிந்தது. இதைப் பாதுகாப்பதற்காக `கொங்ககோசாலை’ என்ற அமைப்பை நிறுவி, இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் காங்கயம் இன மாடுகளை விலை கொடுத்து வாங்கி, அதே விலைக்கு வளர்ப்புக்காக விவசாயிகளுக்கு வழங்குகிறோம். இப்படி 5 ஆயிரம் மாடுகள் காப்பாற்றப்பட்டுள்ளன.

அதேபோல, மாடு வளர்ப்போருக்கு மட்டுமே விற்பனை செய்வதற்காக, பழையகோட்டையில் 2016-ல் மாட்டு சந்தை தொடங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில், காங்கயம் இன மாடுகளை மட்டுமே விற்கவும், வாங்கவும் முடியும்.இடைத்தரகர்கள், வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது. விற்கப்படும் மாடுகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அவற்றை திருப்பியளிக்கும் முறையும் இங்குள்ளது.

கரோனா ஊரடங்கால் சந்தைகள் மூடப்பட்டதால், இடைத்தரகர்கள், வியாபாரிகள் சிலர், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம், வளர்ப்புக்காக என்று கூறி, மாடுகளை வாங்கிச் சென்று, இறைச்சிக்காக விற்று விடுகின்றனர்.

கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்ட மாட்டிறைச்சியின் விலை, கரோனா தாக்கத்தால் இப்போது இரண்டு மடங்காகி விட்டது. இதனால் சந்தைகளில் ரூ.30 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட மாடுகளுக்கு தற்போது ரூ.45 ஆயிரம் விலை கிடைப்பதால், விவசாயிகளும் அவற்றை விற்றுவிடுகின்றனர்.

கட்டணமில்லா சேவை எண்

இதைத் தடுக்க, வாங்குவோர், விற்போருக்கான தொடர்பை ஏற்படுத்தும் வகையில், கட்டணமில்லா சேவை எண்ணை அறிமுகப்படுத்தி, தன்னார்வலர்கள் மூலம் கடந்த 3 மாதங்களில் 600 மாடுகளைப் பாதுகாத்துள்ளோம்.

உரிய பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி, மூடப்பட்டுள்ள மாட்டு சந்தைகளை உடனடியாக திறக்க அரசு முன்வர வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கால்நடைத் துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in