Published : 24 Aug 2020 07:05 PM
Last Updated : 24 Aug 2020 07:05 PM

கண் பார்வை பாதுகாப்பு: சென்னையில் 5 வயதுக்குக் கீழ் உள்ள 5.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம்; 4 நாட்கள் நடக்கிறது

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5,72,674 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் 4 நாள் முகாம் நடக்கிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மருத்துவச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அனைத்து சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள், சென்னை மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்களில் இன்று முதல் (24.08.2020) ஆகஸ்டு 28.08.2020 வரை (26.08.2020 புதன்கிழமை நீங்கலாக) நான்கு நாட்களுக்கு 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு முதற்கட்டமாக வைட்டமின்-ஏ திரவ மருந்தை வாய்வழியாகக் கொடுக்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட உள்ளது.

இரண்டாம் கட்டமாக, இந்த முகாம்கள் ஆகஸ்டு 31/2020 முதல் செப்டம்பர் 04/2020 வரை (02.09.2020 புதன்கிழமை நீங்கலாக) நான்கு நாட்களுக்கு நடத்தப்பட்டு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த முகாம்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு ஆகஸ்டு 29 மற்றும் செப்டம்பர் 05 ஆகிய இரண்டு நாட்களுக்கு முகாம் நடத்தப்பட்டு வழங்கப்படும். இம்முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5,72,674 குழந்தைகள் பயனடைவார்கள்.

தேசிய வைட்டமின்-ஏ குறைபாடு கட்டுப்பாடு திட்டம் முதன்முதலில் 1970-ல் 7 மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1975-ம் ஆண்டு இந்தியா முழுவதும் விரிவாக்கப்பட்டது. குழந்தைகளின் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட வைட்டமின்-ஏ நுண்ணூட்டச் சத்து நான்கு மாதங்களில் குறைய ஆரம்பித்து ஆறு மாதங்களில் மிகவும் குறைந்து விடுகிறது.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின்-ஏ விளங்குகிறது. வைட்டமின்-ஏ திரவம் வழங்குவதன் மூலம் பார்வையின்மை தடுக்கப்படுகிறது. எனவே, வைட்டமின்-ஏ நுண்ணூட்டச் சத்து 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை கொடுப்பது அவசியமாகிறது.

மேலும், இந்த முகாம்களில் அரசு அறிவித்துள்ள கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றியும், தெர்மல் ஸ்கேனர் கொண்டு காய்ச்சல் அறிகுறி உள்ளனவா எனப் பரிசோதிக்கப்பட்டும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் அனுமதிக்கப்படுவர்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தங்களின் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவ மருந்தைக் கொடுத்துப் பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x