

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பப்புராம் என்ற தலித் கிராம தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை தலைவரும், மகாராஷ்டிரா மாநில மின்சாரத்துறை அமைச்சருமான நிதின் ரௌட்டை உ.பி. மாநில போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதைக் கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.
காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில துணை தலைவர் ஏ.மாரிமுத்து தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட எஸ்.சி.துறை ஜி.கனகராஜ், வடக்கு மாவட்ட பொருளாளர் கேசவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பிரேம்குமார், மாவட்ட பட்டதாரிகள் பிரிவு தலைவர் கே.டி.பி.அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, உ.பி.யில் தலித்துகளுக்கு உதிராக நடந்து வரும் வன்கொடுமைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அந்த மாநில மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவி வருவதால் அந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் முழங்கினர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.