

2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் பூரணசுந்தரி, பாலநாகேந்திரனை தலைமைச் செயலகத்துக்கு அழைத்த முதல்வர் பழனிசாமி, அவர்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார்.
ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற ஆட்சிப்பணிகளுக்கான தேர்வு இந்தியாவில் நடக்கும் முதன்மைத்தேர்வுகளில் ஒன்றாகும். நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள மாணவர்களே கடும் முயற்சிக்குப்பின் போராடி வெற்றிபெறும் கடினமான இந்த தேர்வில் இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதல் சிறப்பாக 2 பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெற்றிப்பெற்றனர்.
அதில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி பூரணசுந்தரி தேர்வில் அகில இந்திய அளவில் 286-வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு இருந்த போதும் தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்னொருவர் சென்னையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் பாலநாகேந்திரன் ஆவார். இவர் அகில இந்திய அளவில் 923-வது ரேங்க் எடுத்துள்ளார். தேர்ச்சிப்பெற்ற 60 பேரில் 2 பேர் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்பதால் அவர்களை பலரும் பாராட்டினர். முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்கள் பாராட்டினர்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் தலைமைச் செயலகத்துக்கு நேரில் அழைத்து முதல்வர் பழனிசாமி பாராட்டினார்.
இதுகுறித்த அரசின் செய்திக்குறிப்பு :
2019-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பூரணசுந்தரி மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகியோரை முதல்வர் பழனிசாமி பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
அத்துடன், அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் விஜயராஜ் குமார், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.