Published : 24 Aug 2020 02:14 PM
Last Updated : 24 Aug 2020 02:14 PM

ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய 6 பேரைக் காப்பாற்றிய இளைஞர்: மத்திய அரசின் வீர தீர விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார்

ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய 6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதர் என்பவருக்கு வீர, தீர செயலுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.8.2020) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

நீரில் மூழ்கி விபத்து, தீ விபத்து, மின்சார விபத்து, நிலச் சரிவுகள், விலங்குகளால் தாக்கப்படுதல் மற்றும் சுரங்க விபத்து போன்ற அபாயகரமான விபத்துகளில் சிக்கியவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காக்க தைரியமாகவும், மன வலிமையுடனும் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய அரசால் ஜீவன் ரக்‌ஷா பதக் என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொண்டதாகும்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள வெள்ளையன் ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில், அவ்வழியாகச் சென்ற ஸ்ரீதர் என்பவர், நீரில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக ஏரியின் கரைக்கு இழுத்துச் சென்று ஆறு பேரையும் காப்பாற்றினார்.

நீச்சலில் எவ்வித முறையான பயிற்சியைப் பெறாத நிலையில், 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உயிரைக் காக்க தனது உயிரைப் பணயம் வைத்து ஆர்.ஸ்ரீதர் காப்பாற்றியுள்ளார். இவ்வீர, தீர செயலுக்காக தமிழ்நாடு அரசு 2019 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக் விருதுக்கு இவரது பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, தமிழக முதல்வர் இன்று ஆர்.ஸ்ரீதருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக் விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார். இன்றைய தினம் ஜீவன் ரக்‌ஷா பதக் விருது பெற்ற ஆர்.ஸ்ரீதர், 2019 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது, தமிழ்நாடு அரசின் வீர, தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின்போது தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) ராஹுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x