

கொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலைப் பகுதியில் உள்ள ஆற்றைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள அருவிகள், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த மழையால் மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கொடைக்கானல் குறிஞ்சி நகரைச் சேர்ந்த மணி என்ற யோகராஜ் அப்பகுதியில் உள்ள ஆற்றை நேற்றுமுன்தினம் இரவு கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராது நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இவரது உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை தேடினர். சிறிது தூரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கி இருந்தது.
இது குறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.