Published : 24 Aug 2020 09:01 AM
Last Updated : 24 Aug 2020 09:01 AM

பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா வேதனை

சென்னை

உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருந்தபோதும் அதற்கேற்ற வளர்ச்சி இல்லாமல் போனதற்கு, குடும்பங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பாக ‘வாழ நினைத்தால் வாசல் திறக்கும்’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. அதில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா, தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி, வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா, ஐஜேஎம் தொண்டு நிறுவனத்தின் சமூகப் பணியாளர் ஹெலன் பர்னபாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெண்ணைப் பாதுகாக்கும் சட்டம்

குடும்ப வன்முறையைப் பெண்கள் எவ்வாறு கையாள முடியும் என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா பேசும்போது, “ஐ.நா. அறிக்கையின்படி உலகம் முழுவதும் ஒரு வருடத்துக்குப் பெண்களுக்கு எதிராக 3 கோடிக்கும் அதிகமாக வன்முறை நடக்கிறது. உலக மக்கள் தொகையில் பெண்கள் 50 சதவீதமாக உள்ளனர். ஆனால் அதற்கேற்ப வளர்ச்சி இல்லை. குடும்பங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைதான் இதற்குக் காரணம்.

இந்தியாவில் 2005-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டம் அமல்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்கிறது இந்தச் சட்டம். அவர்களுக்குப் பதில் அப்பெண்ணின் நலன் விரும்பிகள் ஆஜராகலாம். இச்சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்க உரிமையியல் நீதிமன்றங்கள் உள்ளன.

நீதிபதி எஸ்.விமலா

உடல்ரீதியாக, பாலியல்ரீதியாக, வார்த்தைரீதியாக, உணர்வுரீதியாக, பொருளாதாரரீதியாக ஒரு பெண்ணைக் கணவனோ குடும்ப உறுப்பினர்களோ துன்புறுத்தினால் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி புகார் அளிக்க முடியும். பெண்கள் புகார் அளிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு அலுவலர், சட்ட ஆலோசகர் ஆகியோர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணே நேரடியாக நீதிமன்றம் சென்று புகார் அளிக்க முடியும்.

கணவன் மீது புகார் அளித்த பிறகு பெண் சந்திக்கும் முதல் பிரச்சினை புகுந்த வீட்டில் வசிக்கக் கூடாது என்பதுதான். கணவன் மீது ஒரு பெண் புகார் அளித்தாலும் அவர் அதே வீட்டில் வசிக்க முடியும். அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு மற்றவர்கள் இடைஞ்சல் செய்தால் அவர்கள் இச்சட்டத்தின் மூலமாக வீட்டை விட்டு வெளியேற்றப்படுபவர்கள்” என்றார்.

சட்ட விழிப்புணர்வு அவசியம்

பெண்கள் எவ்வாறு எளிமையாகக் காவல் துறையினரை அணுகலாம் என்ற தலைப்பில் காவல்துறை முன்னாள் இயக்குநர் திலகவதி ஐ.பி.எஸ்., பேசினார். “குடும்ப வன்முறை சட்டம் அமல்படுத்தப்பட்டபோது நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 4,587 குற்றங்கள் மட்டும் பதிவாகியிருந்தன. ஆனால், தற்போது தமிழகத்தில் மட்டும் 3,838 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் வெறும் ஒரு குற்றம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 4 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது எப்படிச் சாத்தியம்? இந்த மாநிலங்களில் குற்றங்களைப் பதிவுசெய்வதிலேயே பிரச்சினை உள்ளது.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தையை விசாரிக்கச் செல்லும் காவல் துறையினர் சாதாரண உடையில் செல்ல வேண்டும், அவர் பெண் காவலராக இருக்க வேண்டும், குழந்தையின் நம்பிக்கைக்குரிய நபர் அருகில் இருக்க வேண்டும், மீண்டும் மீண்டும் குழந்தையை விசாரித்து மன உளைச்சல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கக் குழந்தையின் வாக்கு மூலத்தை வீடியோவில் பதிவு செய்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் ‘போக்சோ’ சட்டத்தில் உள்ளது.

திலகவதி ஐ.பி.எஸ்

ஆனால், இவ்வளவு விஷயங்கள் இருந்தும் குழந்தைகள் மீதான வன்முறை குறையவில்லை. ஆபத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவ 1098 மற்றும் பெண்களுக்கு உதவ 1091 ஆகிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவி எண்களைக் கிராமப்புறங்களிலும் பெண்கள் வேலைசெய்யும் தளங்களிலும் கல்வி நிலையங்களிலும் பிரபலப்படுத்த வேண்டும்.

ஒரு பெண் நீதி கேட்டுச் செல்லும் பயணம் எளிதானதல்ல. பெண்களைப் பாதுகாக்க உள்ள சட்டங்கள் அனைத்துப் பெண்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தப்பட வேண்டும். கிராமப்புற பெண்களும் புரிந்துகொள்ளும் வகையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்டங்களை அந்தந்த மாநில மொழிகளில் எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

புறக்கணிப்பதும் வன்முறையே

குழந்தைகள் மீதான வன்முறை என்ற தலைப்பில் வழக்கறிஞரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான பி.எஸ்.அஜிதா பேசும்போது, “குழந்தைகள் மீதான வன்முறை என்றாலே பாலியல் வன்முறை எனப் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பாலியல் வன்முறைகள் மட்டுமல்லாமல் குழந்தைகள் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குறிப்பாக இந்த கரோனாவின் ஆரம்ப நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் குழந்தைகள் உதவி மையத்துக்கு உதவி கோரி 3 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 92 ஆயிரம் அழைப்புகள் கூடுதலாக வந்துள்ளன.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சட்டம் 2012-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பிறகு குழந்தைகள் மீதான வன்முறை குறித்த பார்வை மாறியுள்ளது. 18 வயதுக்குஉட்பட்ட எவர் மீதும் பெற்றோர், பாதுகாவலர்கள், சம வயதினர், காதல் இணையர், முகமறியா நபர்கள் செய்யக்கூடிய வன்முறை அனைத்தும் குழந்தைகள் மீதான வன்முறையே. உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் சுமார் 10 கோடி குழந்தைகள் உடல்ரீதியான, உளவியல்ரீதியான, பாலியல்ரீதியான வன்முறைக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.அஜிதா

குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்க முடியும் என்பதற்கான சான்றுகள் உலகம் முழுவதும் உண்டு. குழந்தைகள் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், வன்முறையில் ஈடுபட்டவரை மன்னிக்ககூடாது, குழந்தைகள் மீதான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று அரசும் சமூகமும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களை அரசும் சமூகமும் பின்பற்றத் தவறினால் குழந்தைகள் மீதான வன்முறைகளின் விளைவாகக் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரிக்கும். மூளை, நரம்பு பாதிக்கப்படும். ஆபத்தான நடத்தைக்குத் தூண்டி உடல் நலத்துக்குக் கேடு ஏற்படும்.

நல்வாய்ப்புகளையும் நல்ல எதிர்காலத்தையும் இழக்க நேரிடும்.குழந்தைகளின் பாதுகாப்பு, வளர்ச்சியுடன் குழந்தைகள் மீது வன்முறையற்ற சமூகம் உருவாக வேண்டும் என்றால் குழந்தைகளுக்கான பிரத்யேகமான அமைச்சகம், சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் போன்றவை தேவை. இவற்றையெல்லாம் வலியுறுத்துவதற்கு, மக்களாகிய நாம் முன்வருவது அவசியம்” என்றார்.

கொத்தடிமை தொழிலாளர்களையும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆள்கடத்தலில் இருந்து மீட்கும் ‘ஐஜேஎம்’ அமைப்பின் சமூகப் பணியாளர் ஹெலன் பர்னபாஸ், கூறும்போது, “பொதுவாக கொத்தடிமைகள் மற்றும் கடத்தப்படும் பெண்கள், குழந்தைகள் வேறு எங்கும் இல்லை. தினமும் நாம் கடந்து செல்லும் சாலைகளில்தான் உள்ளனர். அவர்களை முதலில் அடையாளம் காண வேண்டும். பிறகு அவர்களிடம் பேச வேண்டும், அவர்களைக்ள் கொடுமையில்இருந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசு உதவிக் குழுக்களை ஏற்படுத்தியுஉள்ளது” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பதில் அளித்தனர். நிகழ்ச்சியை ‘இந்து தமிழ்’ நாளிதழின் துணை ஆசிரியர் பிருந்தா சீனிவாசன் நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ்’ முகநூல் பக்கத்திலும் யூ-டியூப் (https://youtu.be/7MLMO1hvUaY) பக்கத்திலும் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x