

மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், இப்பகுதியில் தொழில் வளர்ச்சி மேம்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையம் 1959 வரை சிறப்பாக இயங்கி வந்தது. அதன்பின், பேருந்துப் போக்குவரத்து வசதி அதிகமானதாலும், நகரிலிருந்து 2 கி.மீ தொலைவில் ரயில் நிலையம் அமைந்திருப்பதாலும், ரயில் போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்துவது குறையத் தொடங்கியது. இதனால் வருமானம் குறைந்ததால் 1974 முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின், கடந்த 2011 முதல் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இங்கிருந்து 4 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 2 பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கு ரயில் நிலையம் தொடங்கப்பட்டபோதே, 3-வது ரயில் பாதை அமைக்கவும், லாரிகள் வந்து செல்வதற்கான இணைப்புச் சாலைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் நில ஆர்ஜிதம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், இணைப்புச் சாலை மற்றும் 3-வது ரயில் பாதை பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
ரூ.10 கோடியில் பணிகள்
கடந்த 2017-ல் இவ்வழக்கு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ரூ.10 கோடியில் ரயில் பாதை மற்றும் இணைப்புச் சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்தன.
இந்நிலையில், மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்கு மன்னார்குடி பகுதி மக்கள் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு முயற்சி மேற்கொண்ட மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, ரயில் நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் உள்ளிட்டோருக்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் எஸ்.எப்.ராஜதுரை கூறியதாவது: மன்னார்குடி அருகே பாமணியில் மத்திய சேமிப்புக் கிடங்கு உள்ளது. அங்குள்ள 10 கிடங்குகளில் 6 கிடங்குகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. எஞ்சிய 4 கிடங்குகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. தற்போது மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க உள்ளதால், இங்குள்ள தனியார் உர நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளும் உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள முடியும்.
மேலும், மன்னார்குடி நகரத்தைச் சுற்றியுள்ள 430 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி கிடங்குகளிலிருந்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணி விரைவாக நடைபெறும். இதன்மூலம் ஆண்டு முழுவதும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன், லாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு கூடுதலாக கிடைக்கும். அத்துடன், ஏற்கெனவே திட்டமிட்டபடி பட்டுக்கோட்டை- மன்னார்குடி இடையே அகலப்பாதை அமைக்கப்பட்டால் இந்த சரக்கு போக்குவரத்து மூலம் கூடுதல் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றார்.
ரயில்வே உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் ஹரேஷ் கூறியதாவது: சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னேற்பாடாக ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் நிற்கும் தொலைவுக்கு ரயில் நடைமேடை அமைக்கும் பணி ஏற்கெனவே முடிவடைந்து விட்டது. தற்போது சரக்கு ரயில் நிற்பதற்கான தண்டவாளப் பணி முடிவடைந்துள்ளதுடன், இரவு நேரங்களிலும் சரக்கு ரயில் பெட்டிகளில் மூட்டைகளை தொழிலாளர்கள் ஏற்றி இறக்குவதற்கு உதவியாக மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்க அனுமதி கிடைத்துள்ளதால், பாமணி உரத்தொழிற்சாலைக்கு மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கும், தயாரிக்கப்பட்ட உர மூட்டைகளை வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்லவும் வாய்ப்பாக அமையும். இதனால் மன்னார்குடி பகுதியின் தொழில் வளர்ச்சி மேம்படும் என்றார்.