

கிரிக்கெட் வீரர் தோனி, அவரது மகளுடன் இருப்பது போன்ற உருவப்படத்தை சென்னிமலை நெசவாளர் ஒருவர் கைத்தறிப் போர்வையில் நெய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் அப்புசாமி. சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வடிவமைப்பாளராக உள்ளார். இவர் பல்வேறு பிரபலங்களின் உருவங்களை வடிவமைத்து, அதை கைத்தறி நெசவு மூலம் போர்வையாக தயார் செய்துள்ளார்.
தற்போது கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மகளுடன் இருப்பது போன்ற படத்தை வடிவமைத்து, அதை கைத்தறி நெசவு மூலம் போர்வையாக உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து அப்புசாமி கூறும்போது, ‘‘தந்தை - மகள் பாசத்தை பிரதிபலிப்பது போல தன் மகளுடன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படத்தை 15 நாட்கள் கைக்கோர்வை மூலம் வடிவமைத்தேன். பின்னர் அதை 44X47 அங்குல அளவில் கைத்தறி மூலம் போர்வையாக உருவாக்கினேன். இதன் எடை 430 கிராம். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ள தோனியை நேரில் சந்தித்து, இதை நினைவுப் பரிசாக வழங்க உள்ளேன்’’ என்றார்.
இவர் ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் உருவப் படத்தை திரைச்சீலையில் உருவாக்கி, அதை சச்சினிடம் நேரில் கொடுத்து பாராட்டு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.