

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, சித்தளி, ரஞ்சன்குடி, திருவாலந்துறை, சிறுவாச்சூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள வனப்பகுதியில் ஆயிரக் கணக்கான மான்கள் உள்ளன. வனப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், ஊர் களுக்குள் தண்ணீர் தேடி அடிக்கடி புள்ளிமான்கள் வருகின்றன.
இவ்வாறு தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. நாய், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளால் கடிபட்டு பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. மேலும், சமூகவிரோதிகளின் வேட்டைக்கும் இலக்காகின்றன.
சில சமயம் வழி தவறி மக்கள் வசிப்பிடங்களுக்கு வரும் மான்கள், எச்சரிக்கை உணர்வு மிகுதியால் இங்கும் அங்கும் வேகமாக ஓடும்போது, பொதுமக்களை முட்டித்தள்ளுவதால் அவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளனர்.
வி.களத்தூர் பகுதியில் நேற்று வழி தவறி ஊருக்குள் புகுந்த 5 வயது ஆண் புள்ளி மான் ஒன்று மிரண்டு ஓடியபோது, அங்குள்ள பொதுமக்களை தனது நீண்ட கொம்புகளால் முட்டியுள்ளது. மானை கண்டு அச்சத்தில் ஓடிய பொதுமக்கள் சிலர் சாலைகளில் விழுந்து காயமடைந்தனர்.
எனவே, மான்களுக்கு வனப் பகுதியில் போதியளவு தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தால் மான்கள் ஊருக்குள் புகுந்து விபத்தில் சிக்கிக் கொள்வதை தடுக்கலாம். பொதுமக்களை அச்சுறுத்துவதையும் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.