Published : 24 Aug 2020 08:27 AM
Last Updated : 24 Aug 2020 08:27 AM

5 மாதங்களுக்கு முன்பு 120 கி.மீ தொலைவுக்கு கணவரால் சைக்கிளில் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் மரணம்

கூலித் தொழிலாளி ஒருவர் புற்று நோயால் அவதிப்பட்ட தனது மனைவியை 5 மாதங்களுக்கு முன்பு கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த நிலையில், நேற்று அதிகாலை அந்தப் பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரம் மணல்மேட்டு ஆற்றங் கரை தெருவைச் சேர்ந்தவர் அறி வழகன்(60), கூலித் தொழிலாளி. இவரது 2-வது மனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு 12 வயதில் மனவளர்ச்சி குன்றிய மகன் உள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய மஞ்சுளா வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து, கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மார்ச் 29-ம் தேதி அறிவழகன் தனது மனைவி மஞ்சுளாவை சைக்கிளில் அமரவைத்து, 120 கி.மீ. தொலை வில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதும் அறிவழகனின் செயலை பாராட்டி பலரும் அவருக்கு பணம், பொருள் உதவி செய்தனர். பின்னர் வீட்டிலிருந்து மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்த மஞ்சுளா நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த அறிவழகன் கூறியபோது, “ரூ.1 லட்சம் வரை பலர் அளித்த உதவியாலும், கடன் வாங்கியும் என் மனைவிக்கு மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கவனித்தபோதும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x