

ஈரோடு வெண்டிபாளையம் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியில் வசிப்போருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, வெண்டிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில் குவிக்கப்படுகின்றன. இந்த குப்பைக் கிடங்கைச் சுற்றிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. குப்பைமேடு முழுவதும் பற்றி எரியத் தொடங்கியதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 வாகனங் களைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு அலுவலர்கள் முயற்சித்தனர்.
ஆனால், பலத்த காற்று வீசத் தொடங்கியதால், தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அதோடு, குப்பையிலிருந்து வெளிப்பட்ட புகையினால் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகினர். அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போரும் புகையால் மூச்சுத்திணறலுக்கு உள்ளானார்கள்.
இதனிடையே தீயணைப்புத் துறையினருக்கு உதவியாக மாநகராட்சி ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாகனங்களில் தீயை அணைப்பதற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பத்து மணி நேரத்திற்கு மேலாகியும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. சிறப்பு முகக்கவசங்களை அணிந்தவாறு தீயணைப்பு அலுவலர்கள் தீயை முழுமையாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ‘குப்பை மேடு முழுவதும் தீ வேகமாக பரவுவதால் தீயை அணைப்பதற்கு கூடுதலாக 24 மணி நேரம் ஆகலாம்’ என தீயணைப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.