Published : 24 Aug 2020 07:51 AM
Last Updated : 24 Aug 2020 07:51 AM

ஆரவாரம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள்; வீட்டில் வைத்த விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த மக்கள்: தடையை மீறியதாக 3 இடங்களில் வழக்குப் பதிவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மெரினா, கலங்கரை விளக்கம் அருகே செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். கூடுதல் ஆணையர்கள் ஆர்.தினகரன் (தெற்கு), என்.கண்ணன் (போக்குவரத்து) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை

வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை ஆரவாரம் இன்றி எடுத்துச் சென்று பொதுமக்கள் நீர் நிலைகளில் கரைத்தனர். தடையை மீறியதாக 3 இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்து அமைப்புகள், தனியார் அமைப்பினர், ஊர் மக்கள், தன்னார்வலர்கள் என பல தரப்பினரும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை நிறுவுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் உள்ளிட்ட இடங்களுக்கு மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுவது வழக்கம். இதற்காக காவல் துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள்.

இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது. வீட்டில் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்பினர், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் தனியார் இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். அந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட பின்னர் பிற்பகல் முதலே குடும்பம், குடும்பமாக நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று ஆரவாரமின்றி முதல் நாளிலேயே விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்தனர்.

நேப்பியர் பாலத்திலிருந்து சாந்தோம்கடற்கரை வரை மெரினா கடற்கரையில் சிலைகளை கரைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அங்கு கரைக்காமல் பட்டினம்பாக்கம் உட்பட மீதம் உள்ள கடற்கரைப் பகுதிகள், நீர் நிலைகளில் குடும்பத்துடன் பூஜை நடத்திய பிறகு கடலில் கரைத்தனர். இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் சென்றும் விநாயகர் சிலைகளை கரைத்தனர். சிலர் கைகளில் சுமந்தவாறு சென்றனர்.

நீர் நிலைகளுக்கு எடுத்துச் செல்ல இயலாதவர்கள் அருகில் உள்ள கோயில்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். சிலர் நீர் நிரப்பப்பட்ட பெரிய பாத்திரங்களில் விநாயகர் சிலைகளை கரைத்ததை காணமுடிந்தது. இப்படி நேற்று முன்தினம் மட்டும் 3 அடி மற்றும் அதற்கு குறைவான உயரத்தில் 350 சிலைகள் நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சிலைகளும் கரைக்கப்பட்டுள்ளன.

வேளச்சேரி மெயின்ரோடு, நந்திவரம் நகர் தபால் அலுவலகம் முன்பு அனுமதி இல்லாமல் 3 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்லப்பாண்டியன் நேற்று முன்தினம் ஜீப்பில் வைத்து, அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு எடுத்துச் சென்றபோது போலீஸார் தடுத்தனர். இதைத் தொடர்ந்து அவருடன் 26 இருசக்கர வாகனங்களில் திரண்டு வந்த 40 பேர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வேளச்சேரி காவல் நிலைய போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சென்னையில் 2 இடங்களில் தடையை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காவல் ஆணையர் ஆய்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மெரினா, கலங்கரை விளக்கம் அருகே செய்யப்பட்டுள்ள போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். கூடுதல் ஆணையர்கள் ஆர்.தினகரன் (தெற்கு), என்.கண்ணன் (போக்குவரத்து) ஆகியோர் உடனிருந்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x