

தனது பிறந்த நாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, கிராமங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என தேமுதிகவினருக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தி உள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா நாளைகொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2005-ம் ஆண்டு தேமுதிகதொடங்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி எனதுபிறந்தநாளை, வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகிறேன். தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியைப் பின்பற்றிஅவர்களால் முடிந்த அளவு மக்களுக்கான பல்வேறு உதவிகளை ஆண்டுதோறும் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை பல ஆயிரம் உயிர்களை இழந்துள்ளோம். கரோனா ஊரடங்கால் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல இந்த ஆண்டு எனதுபிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
தற்போது கரோனா காலகட்டம் என்பதால் இந்த முறை சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ‘கிராமப்புற சுகாதார திட்டத்தை’ செயல்படுத்த வேண்டும். ஒரு ஒன்றியத்தில் முன்மாதிரியாக ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்த வேண்டும். தெருக்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
கிராமங்கள்தோறும் கபசுரக் குடிநீர், முகக் கவசம், கையுறை, சோப்பு, சானிடைசர் வழங்குவது, ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள், மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்க வேண்டும்.
குடியிருப்புகள், சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவது, விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசுவது, கரோனா மருத்துவ உபகரணங்களை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த ஆண்டும் எனது பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.