

மத்திய அரசின் உத்தரவையடுத்து தமிழகத்தில் இ-பாஸ் நடை முறையை ரத்து செய்வது குறித்து தலைமைச் செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல்வேறு கட்டங் களாக தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டபோதே, நெருங்கிய உறவினர் திருமணம், மரணம், அவசர மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
முதலில் காவல்துறையிடம் இருந்த இ-பாஸ் அதிகாரம், தற்போது சென்னையில் மாநகராட்சியிடமும் இதர மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் திருமணம், மரணம், மருத்துவ அவசரம் மட்டுமின்றி தொழிலாளர்களை அழைத்து வரவும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தது. போலி இ-பாஸ் தயாரிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இ-பாஸ் முறை தொடரும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
7-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது, ஆகஸ்ட் 1 முதல் இ-பாஸ் முறையை ரத்து செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால், தமிழகத்தில் ரத்து செய் யப்படவில்லை. இருப்பினும், கடந்த 17-ம் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பெயரில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே எல்லைகளை அடிக்கடி மூடி வருவதாகவும், இது நாடு முழுவதும் விநியோக சங்கிலிகளை சீர்குலைப்பதாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதனால், சரக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கக் கூடாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம், பல நினைவூட்டல்களை மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தாலும் பிரச்சினை நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் தொற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாநிலங்களின் எல்லைகளை, குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளை அடிக்கடி மூடி சீல் வைக்கின்றன. இந்த மாநிலங்கள் வழியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாததால் பிற மாநிலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மாநிலங்களுக்கு இடையிலான மக்கள், சரக்கு போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வழிகாட்டுதல்களை மீறுவதாகும்
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
உள்ளூர் அளவில் மாவட்ட நிர்வாகத்தால் அல்லது மாநில அரசால் விதிக்கப்பட்ட சரக்கு, பொதுமக்கள் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள், பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை மீறுவதாகும். இது வேலைவாய்ப்புகளை பாதிக்கிறது. மேலும் சரக்குகள் மீதான தடை நீடிப்பதால் விநியோகச் சங்கிலி அறுபடுகிறது. எனவே சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு மாநில அரசுகள் தடை விதிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தை தொடர்ந்து, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதன்பின் முதல்வருடன் ஆலோசித்து, இ-பாஸ் ரத்து செய்வது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரியில் இ-பாஸ் ரத்து
புதுச்சேரி: மத்திய அரசின் உத்தரவையடுத்து புதுச்சேரியில் நேற்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இ-பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து இ-பாஸ் வழங்குவதற்காக புதுச்சேரி அரசு தொடங்கிய இணையதளத்தின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது, ‘‘திங்கள்கிழமை (இன்று) பேரிடர் மேலாண்மை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் மத்திய அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்திருப்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளோம்’’ என்றார்.