

கொடைக்கானலில் தொடர்மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைப்பகுதியில் உள்ள ஆற்றை கடக்கமுயன்றபோது வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று இரவு பலத்த மழைபெய்தது. இதனால் மலைப்பகுதியில் உள்ள அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலைப்பகுதியில் பலத்த மழையால் மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. கொடைக்கானல் குறிஞ்சிநகரை சேர்ந்த மணி என்ற யோகராஜ் அப்பகுதியில் உள்ள ஆற்றை நேற்றுமுன்தினம் இரவு கடக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாரதவிதமாக ஆற்றில் நீர் அதிகரிக்கவே மணிராஜ் நீரில் அடித்துச்செல்லப்பட்டார். தொடர் மழை, இரவு நேரம் என்பதால் இவர் நிலை குறித்து இன்று அதிகாலைவரை அறியமுடியாதநிலை இருந்தது.
இந்நிலையில் இன்று காலை மணிராஜை தேடும் பணியில் கொடைக்கானல் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். மணிராஜ் உடல் இறந்தநிலையில் சிறிது தூரத்தில் கரைஒதுங்கியிருந்தது தெரியவந்தது.
உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.