தளர்வில்லா முழு ஊரடங்கை மீறி தூத்துக்குடியில் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றிய 400 பேருக்கு கரோனா பரிசோதனை

தளர்வில்லா முழு ஊரடங்கை மீறி தூத்துக்குடியில் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றிய 400 பேருக்கு கரோனா பரிசோதனை
Updated on
1 min read

தூத்துக்குடியில் தளர்வில்லா முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்த 400 பேருக்கு இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாமல் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து பகுதிகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன.

இன்று மூகூர்த்த தினம் என்பதால் சாலைகளில் ஆங்காங்கே மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி தீவிரமாக விசாரித்து அனுப்பினர்.

உண்மையான காரணங்களுக்காக சென்றவர்களை போலீஸார் உரிய அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர். தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். தளர்வில்லா ஊரடங்கை கண்காணிக்க மாவட்டத்தில் 200 இடங்களில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி மாநகரில் மட்டும் 26 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதேவேளையில் தூத்துக்குடியில் தளர்வில்லா ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களை மாநகராட்சி பணியாளர்கள் மடக்கி பிடித்து, அனைவரிடமும் கரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தனர். இதற்காக மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் தலா ஒரு இடத்தில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் தலா 100 பேர் என மொத்தம் 400 பேரிடம் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in