கரோனா அச்சம்: ஜேஇஇ, நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
2 min read

ஜேஇஇ, நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:

"ஜேஇஇ தேர்வு வருகிற செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையும் நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 13-ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் கரோனா தொற்றின் காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்கும்படி உயர் நீதிமன்றத்தி;ல் வழங்கு தொடுத்து இருந்த நிலையில், உயர் நீதிமன்றம் நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது, மத்திய அரசின் கொள்கை முடிவின்படி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

ஜேஇஇ/நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இந்த கரோனா காலக்கட்டத்தால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆதலால் தேர்வு மையங்களுக்குப் பல்வேறு இடங்களில் இருந்து பல கிலோ மீட்டர் கடந்து வந்து மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்களை தேர்வு மையத்திற்கு அழைத்து வரவேண்டியுள்ளது. அதோடு தூரத்தில் இருந்து வருபவர்கள் கரோனாவின் காரணங்களால் உணவகங்களில் தங்கவோ உணவு அருந்தவோ அச்சமான சூழ்நிலை நிலவுகிறது.

மூக்குக் கண்ணாடி அணியும் மாணவர்கள், கண்ணாடி அணிந்து கொண்டும், முகக்கவசம் அணிந்து கொண்டும் தேர்வு எழுதும் போது மூச்சுக் காற்றின் வெப்பத்தினால் கண்ணாடி மறைக்கப்பட்டு சிரமம் எற்படுகிறது. முகக்கவசத்தை எடுத்து விட்டால் நோய்த்தொற்றும் அபாயம் உள்ளது. அதோடு பல்வேறு மாநிலங்களில் இயற்கை சீற்றத்தால் மழை வெள்ளத்தினால் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது. உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், 10 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் நடைமுறை சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாகி சிலர் தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றர். அதோடு மன அழுத்தம் காரணமாக படிப்பதிலும் தேர்வு எழுதுவதிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அச்சத்தின் காரணமாக நன்கு படிக்கும் மாணவர்களால் கூட மனரீதியாக பாதிக்கப்பட்டு தேர்வில் முறையாக கவனம் செலுத்த முடியாமல் அவதியுறுகின்றர். ஆகவே, மாணவர்களின் அச்சம் நீங்கி இயல்பால நிலை வரும்போதுதான் மாணவர்களால் ஆர்வமாக தேர்வு எழுதும் சூழ்நிலை வரும்.

ஆகவே, மத்திய அரசு மாணவர்களின் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் எதிர்கால நலன் கருதியும் ஜேஇஇ/நீட் தேர்வை கரோனா நோய்த்தொற்றுக் கட்டுக்குள் வந்த பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே, மத்திய அரசையும் மத்திய கல்வி அமைச்சகத்தையும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in