

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் நடந்த பரிசல் விபத்தில் மாயமான 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப் பட்டன.
சென்னை தெற்கு உஸ்மான் சாலை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் குடும்பத்தார் 9 பேர் நேற்று முன்தினம் ஒகேனக்கல் லுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் பரிசல் பயணம் மேற்கொண்டபோது மணல்திட்டு அடுத்த தொம்பச்சிக்கல் பகுதியில் மதியம் 1 மணியளவில் திடீரென பரிசல் நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் ராஜேஷ், அவரது மனைவி கோமதி, சிறு வன் சச்சின் ஆகிய 3 பேர் மட்டும் பரிசல் ஓட்டிகள் சிலரால் காப்பாற்றப்பட்டனர். மற்ற 6 பேர் மாயமான நிலையில் கவுரி, சிறுவன் தர்ஷன் ஆகியோர் அன்று மாலையே சடலமாக மீட்கப்பட்டனர்.
மற்ற 4 பேரை தேடும் பணியில் ஒகேனக்கல் தீயணைப்பு மீட்புப் பணிக் குழுவினர் நிலைய அலுவ லர் ஜானகிராமன் தலைமையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் 1 மணியளவில் ஒகேனக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநிலம் செங்கப்பாடி அருகே மேட்டூர் அடுத்த ஆத்தூரில் கோகிலா என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.
மேலும், கிருஷ்ணமூர்த்தி, ரஞ் சித் ஆகியோரின் சடலம் விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே நேற்று மாலை 6 மணியளவில் மீட்கப்பட்டது. ரஞ்சித்-கோகிலா தம்பதியின் 1 வயது குழந்தையான சுபிக்ஷாவின் நிலை மட்டும் தெரியவில்லை. இருட்டியதால் 6 மணிக்கு பிறகு மீட்புப் பணியும் நிறுத்தப்பட்டது. இன்று குழந்தையின் நிலை தெரிய வரும். மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
பரிசல் ஓட்டி கைது
விபத்து நடந்த பரிசலை ஓட்டிச் சென்ற முருகன் என்பவரை ஒகேனக்கல் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர் மது அருந்திவிட்டு பரிசல் இயக்கியதாக புகார் எழுந்ததை அடுத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகத் தெரிகிறது.