6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்

6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது டொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறியுள்ளதாவது:

நோயின்றி வாழ சத்தான உணவை நாள்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கண் பார்வைக்கும், உள்ளுறுப்புகளின் சவ்வுப் பகுதியைக் காக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இன்றியமையாததாக அமைந்துள்ளது. பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிற உணவுகளில் வைட்டமின் ஏ மிகுந்து காணப்படுகிறது.

வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளிடம் வைட்டமின் ஏ குறைபாடு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்கும் வகையில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

வருகிற 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை முதல்கட்டமாகவும், வருகிற 31-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை இரண்டாம்கட்டமாகவும், விடுபட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in