

இந்தி தெரியாத தமிழக இயற்கை மருத்துவர்களை பயிற்சி வகுப்பில் இருந்து வெளியேறுங்கள் என, ஆயுஷ் அமைச்சக செயலாளர் கூறியதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவர் என 38 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 350 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆகஸ்ட் 18 முதல் 20-ம் தேதி வரை நடந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில், 20-ம் தேதியன்று உரையாற்றிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா இந்தியில் மட்டும் பேசியதாகவும், தமிழக மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாட கோரிக்கை விடுத்ததை உதாசீனப்படுத்தி, இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என அவர் தெரிவித்திருப்பதை கண்டிக்கிறேன்.
நாடு முழுவதும் பொது மொழி என்று இல்லாதபோது, மத்திய அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி தான் பேசும் மொழியை தான் அனைவரும் கவனிக்க வேண்டும் என தன் அதிகார தோரணையை தமிழக மருத்துவர்களிடம் காட்டியிருப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்திலும், தொடர்ந்து இது போன்ற செய்திகள் வருவது இந்திய ஒருமைப்பாட்டு தத்துவத்திற்கு எதிரானது. எனவே, மத்திய அரசு இதுபோன்ற இந்தி திணிப்பு சம்பவங்கள் நடைபெறாதவாறு தடுக்க கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், கூட்டாட்சி தத்துவத்தின்கீழ் ஒன்றிணைந்து ஆட்சி செய்யும் இந்தியாவில், அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற திணிப்பு உருவாவதால் தான், மும்மொழிக்கொள்கையை ஏற்றுக் கொள்வதில் தமிழக மக்களுக்கு ஐயம் உள்ளது.
இந்தியாவில் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாகவும், மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பும் உறுதியாக அமைத்து கொடுத்தால், இந்தி மொழி ஆதிக்க மனநிலை மாறி சுமூகமான சூழலும், இந்திய ஒருமைப்பாடு பேணி பாதுகாக்கப்படும் எனவும் கருதுகிறேன்"
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.