

தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சட்ட விதிகளை மீறுபவர்கள் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்? பொறுப்பற்ற நடத்தை கொண்டோரை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருப்பதாக கோபத்துடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஆக.23) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"மக்கள் சட்டத்தை பின்பற்றாததே இந்தியாவில் கரோனா தொற்று அதிகரிப்பதற்கு முழு காரணம். ஊரடங்கு தளர்வு அளித்தவுடன் பல இடங்களில், ஒரு மைல் தொலைவுக்கு முண்டியடித்துக் கொண்டு நின்று மதுபாட்டிலை வாங்கினர்.
விநாயகர் சதுர்த்திக்கு வெளியே வராமல் வீட்டிலேயே கொண்டாட அறிவுறுத்தியும் யாரும் அதனை மதிக்கவில்லை. அனைவரும் கடைக்குச் சென்று கும்பலோடு கலந்து பொருட்களை வாங்கி கொண்டாடினார்கள்.
இதனால் நோய் தொற்று அதிகமாகும். இப்படி நோய் பரவுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் பணம் செலவிட வேண்டியுள்ளது. மேலும், மருத்துவர், செவிலியர், மருந்து, வென்டிலேட்டர், மருத்துவமனை, உணவு என தேவைப்படுகிறது.
தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சட்ட விதிகளை மீறுபவர்கள் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்? விதியை மீறுவோர் எதற்காக அரசிடம் வருகிறார்கள்? பணம் கட்டி சிகிச்சை பெற வேண்டியதுதானே.
வரி செலுத்துகிறோமே என மக்கள் கேட்கலாம். அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம் ஆனால், நேரடி வரியை எவ்வளவு பேர் செலுத்துகிறார்கள்?
ஒரு பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உண்மையில் சில கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். பொறுப்பற்ற நடத்தை கொண்டோரை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது"
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.