Published : 22 Aug 2020 08:05 AM
Last Updated : 22 Aug 2020 08:05 AM

கிராம கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம்தோறும் ரூ.2,300 உதவித்தொகை: கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை அறிவிப்பு

சென்னை

கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை சார்பில் கிராம கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம்தோறும் ரூ.2,300 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதற்கு தகுதியுள்ள அர்ச்சகர்கள் அக்டோபர்22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறக்கட்டளை தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சி மகா சுவாமிகள் அருளாசியுடன் தொடங்கப்பட்ட கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை மூலம் புராதன கிராம கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு குழு ஆயுள் காப்பீடும் அளிக்கப்படுகிறது. கடந்தஆண்டு வரை ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன்மூலம் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என மொத்தம் 450 பேர் பயன்பெற்றனர்.

இந்த ஆண்டுமுதல் உதவித் தொகை ரூ.2,300 ஆகவும், பயனாளிகள் எண்ணிக்கை 472 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

அவர்கள் பணிபுரியும் கோயில், முறையான கருவறை, நிரந்தர கட்டமைப்போடு 1940-ம் ஆண்டுக்கு முன்னர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அர்ச்சகர்கள் தினமும் 2 முறை பூஜை செய்ய வேண்டும். அவர்களது மாத வருமானம் ரூ.7,500-க்குள் இருக்க வேண்டும். கோயில் பூஜையை ஒருவர் மட்டுமேசெய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளுடன் 2021 பிப்ரவரி, மார்ச் வாக்கில் (மாசி மாதம்) வாய்மொழித் தேர்வு நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வின்போது, காஞ்சி மகா சுவாமிகள் பரிந்துரை செய்த பாடத் திட்டங்களை ஓத வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் ‘கச்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை, எண் 16, இரண்டாவது மெயின் ரோடு, கோட்டூர்புரம், சென்னை 600 085’ என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பி விண்ணப்பங்களை பெறலாம்.

விண்ணப்பங்களை அக்டோபர் 22-க்குள் அனுப்ப வேண்டும். தேர்வுக்கு வருபவர்களின் பயணம்,உணவு செலவுகளை அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும். அறக்கட்டளைக்கான நன்கொடைகளுக்கு வருமானவரி சட்டப் பிரிவு 80-ஜி-யின் கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x