Published : 22 Aug 2020 08:02 AM
Last Updated : 22 Aug 2020 08:02 AM

போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை: மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது

சென்னையில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியுள்ளது.

சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் இளநீர் சங்கர் என்ற சங்கர் (44). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை, கொலை முயற்சி, மாமூல் கேட்டு மிரட்டுதல் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவரை ரவுடிகள் பட்டியலில் போலீஸார் வைத்துள்ளனர். குற்ற வழக்குகள் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸாரும் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை கிழக்குகடற்கரைச் சாலை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் சங்கர் பதுங்கி இருப்பதாக அவரது தோழி ராணி (கஞ்சா வியாபாரி) மூலம் அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு நீலாங்கரை சென்று, சங்கரைகைது செய்து விசாரித்தனர். அயனாவரத்தில் மறைவான இடத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதை கைப்பற்றுவதற்காக, நேற்று காலை 6.30 மணி அளவில் அயனாவரம் நியூ ஆவடி சாலையில் முட்புதர் நிறைந்த பகுதிக்கு அவரை 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு ஏற்கெனவே பதுக்கி வைத்திருந்த அரிவாளால் போலீஸாரை சங்கர் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். தடுக்க முயன்ற முபாரக் என்ற காவலருக்கு வலது கை, இடது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

உடனே ஆய்வாளர் நடராஜன் தற்காப்புக்காக தனது கைத்துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளார். வயிறு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார்.

இதையடுத்து, காயம் அடைந்த காவலர் முபாரக்கை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். சங்கரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன், கிழக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

ஆணையர் நலம் விசாரிப்பு

காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று காலை 11 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்றுவரும் காவலர் முபாரக்கை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர் கூறும்போது, ‘‘என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சங்கர் மீது 50-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் உள்ளன. ஏற்கெனவே 9 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். என்கவுன்ட்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் முழு விவரமும் வெளிவரும்’’ என்றார்.

விசாரணை தொடக்கம்

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன் விசாரணையை தொடங்கியுள்ளார். துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் நடராஜன், காயம் அடைந்த முதல்நிலை காவலர் முபாரக் உட்பட சம்பவ இடத்தில் இருந்த தனிப்படை போலீஸாரை நேரில் அழைத்து அவர் விசாரணை நடத்த உள்ளார். போலீஸார் திட்டமிட்டு சங்கரை சுட்டுக் கொன்றதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

வழக்கின் பின்னணி

சங்கர் குற்ற பின்னணி குறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கடந்த 2007-ல் அயனாவரம் ஞானம், கார்த்திக்குடன் சங்கருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போதே சங்கரை கொல்ல முயற்சி நடந்தது. அதில் இருந்து தப்பிய சங்கர், அவர்களை பழிவாங்க காத்திருந்த நிலையில், 2009-ல் சங்கரின் தம்பி கதிர்வேலை, எதிர் கோஷ்டியினர் கொலை செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், எதிர் தரப்புக்கு பக்கபலமாக இருந்த கஞ்சா விஜியை 2010-ல் கொலை செய்தார். சங்கரின் வழக்குகளை கையாண்டுவந்த வழக்கறிஞரை எதிர்தரப்பினர் அதே ஆண்டில் கொலை செய்தனர். இதிலும் சங்கர் தப்பினார்.

இதன் பிறகு, சங்கர் தலைமறைவானார். தனது தம்பி கதிர்வேல் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான யமஹா பாலாஜியை 2017-ல் கொலை செய்தார். அதேபோல, மதுரவாயலில் கட்டுமான ஒப்பந்ததாரரின் தம்பியை கொன்றது உட்பட 3 கொலை வழக்குகள் உள்ள நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து மாமூல் வசூலித்து வந்தார்.

10 நாட்களுக்கு முன்பு சென்னையில் தேசியக் கட்சி பிரமுகரை வெட்டிய வழக்கிலும் சங்கர் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாகவும் சங்கரை அயனாவரம் போலீஸார் தேடி வந்த நிலையில், தற்போதுஎன்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அடுத்த மணக்கரை பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை பிடிக்கச் சென்ற போலீஸார் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுப்ரமணியன் என்ற காவலர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே தலைநகர் சென்னையில் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 2012-ல் 10 பேர், 2015-ல் 20 பேர் உட்பட கடந்த 10 ஆண்டுகளில் 46 பேர் என்கவுன்ட்டரில் இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x