

ஆவடி அருகே காட்டூர் தொழிற்பேட்டையில் தனியார் சேமிப்புக் கிடங்கில், ரூ.2 கோடி மதிப்புள்ள 15 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடிஅருகே காட்டூர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியார்சேமிப்புக் கிடங்கில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அம்பத்தூர், அத்திப்பட்டைச் சேர்ந்த தமிழ் என்பவரின் இடத்தில் செயல்பட்டு வந்த சேமிப்புக் கிடங்கில் சோதனைசெய்தனர்.
சோதனையில் 4 சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு கன்டெய்னரில் ரூ.2 கோடி மதிப்புள்ள, சுமார் 15 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த சென்னை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், அங்கு பணியில் இருந்த பாலாஜி, ரஞ்சித்குமார், பாபுலால் ஆகிய 3 பேரை கைது செய்து பொருட்களோடு ஆவடி டேங்க் பேக்டரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.