

சென்னை - அரக்கோணம் மற்றும்கூடூர் தடத்தில் விரைவு ரயில்களின் வேகம் மணிக்கு 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்களில் சோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ரயில்வேயில் பெரும்பாலான விரைவு ரயில்கள் ஒருமணிநேரத்துக்கு 80 முதல் 100 கி.மீவேகத்தில் செல்கின்றன.ரயில்வே நிர்வாகம் பல ஆண்டுகளாக ரயில்களின் வேகத்தை கூட்டாமலே இருக்கிறது.
அதிக வேகத்தில் செல்லக்கூடியரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்கள் புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தண்டவாளங்கள் போதிய அளவில் கட்டமைக்கப்படாததால், ரயில்களின் வேகத்தை கூட்டுவதில் சிக்கல் இருந்து வருகிறது. இதற்கிடையே முக்கியமான வழித்தடங்களை தேர்வு செய்து, கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள்தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தனியார் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெறுவதால், புதுடெல்லி - மும்பை, புதுடெல்லி - கொல்கத்தா, சென்னை - மும்பை, மைசூர் – பெங்களூரு உள்ளிட்ட தடங்களில் இருக்கும் பாதைகளில் அதிவேக ரயில்களை இயக்குவதற்கான தண்டவாளங்கள், சிக்னல் அமைப்பு போன்ற கட்டமைப்புகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேவைகள் அதிகரிப்பு
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘புதுடெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் அதிவேக வகை ரயில்களின் தேவை அதிகரித்துள்ளது. அதிவேக வகை ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 200 கி.மீ வேகத்தில் செல்வதற்கான நீண்டகால பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, தற்போது வழக்கமாக இயக்கப்படும் விரைவுரயில்களின் வேகத்தை 110-ல்இருந்து 130 கி.மீ ஆக உயர்த்தும் வகையில் அந்தந்த ரயில் கோட்டங்களில் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டத்தில்..
அதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதில், முதல்கட்டமாக சென்னை கோட்டத்தில் சென்னைசென்ட்ரலில் இருந்து அரக்கோணம், ஜோலார்பேட்டை, கூடூர்வழித்தடங்களில் கட்டமைப்புகள் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, மேற்கண்டவழித்தடங்களில் ரயில்கள் 143 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனையும் நடத்தப்பட்டுள்ளன. இதற்கான, ஒப்புதலை ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு, இந்த வழித்தடங்களில் விரைவு ரயில்களின் வேகம் மணிக்கு 110-ல்இருந்து 130 கி.மீ ஆக அதிகரிக்க முடியும்’’என்றனர்.