தமிழகத்தில் நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு: தொற்று பரவலை தடுக்க கண்காணிப்பு தீவிரம்

தமிழகத்தில் நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு: தொற்று பரவலை தடுக்க கண்காணிப்பு தீவிரம்
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இன்று விநாயகர் சதுர்த்தி விழாகொண்டாடப்படும் நிலையில்,இரவில் இருந்தே கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24-ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா பாதிப்பு ஒரு சில பகுதிகளில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக, சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 5,995 பேருக்குகரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைஅதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

7-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த மாதத்தின் 4 வது ஞாயிற்றுக்கிழமையான நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அத்தியாவசிய கடைகள் திறப்பு

இதன்படி நாளை பால் விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரங்களுக்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படும்.

பொதுமக்கள் வெளியில் வருவதை தடுத்து, கரோனா சங்கிலித் தொடரை துண்டிக்கும் வகையில் இந்த தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சனிக்கிழமைகளில் கடைகள், சந்தைகளில் மக்கள் அதிகளவில் கூடுகின்றனர்.

இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், நேற்று பிற்பகல் முதலே நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சந்தைகள், கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர். கடைகளில் விற்பனையாளர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பணியாற்றுகின்றனர்.

குறிப்பாக சென்னை புறநகரில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒட்டியபகுதிகளில் அதிகளவில் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in