

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்குத் தீர்வு காணும் வகையில் ‘வாழ நினைத்தால் வாசல் திறக்கும்’ என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நாளை நடத்துகிறது.
கரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீதான வன்முறை 100 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெண்கள் மீதான வன்முறை ஊரடங்கு காலத்தில் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
முதல்கட்ட ஊரடங்கின்போது குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சைல்டு ஹெல்ப்லைன்’ எண் 1098-க்கு 11 நாட்களில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் 33 சதவீத அழைப்புகள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பானவையாகும்.
நாளை காலை 11 மணிக்கு
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் அதிகரித்துவரும் பெண்கள்,குழந்தைகள் மீதான வன்முறைக்குத் தீர்வு காணும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் இணையவழி கருத்தரங்கம் நாளை(ஆக.23) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சென்னைஉயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.விமலா, காவல்துறை மேனாள் அதிகாரி திலகவதி ஐபிஎஸ், வழக்கறிஞர் அஜிதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பெண்கள் - குழந்தைகளுக்கான சட்டங்கள், காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து இவர்கள் பேச உள்ளனர். வாசகர்களின் கேள்விகளுக்கும் இவர்கள் பதில் அளிப்பார்கள். நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவோர் https://connect.hindutamil.in/women.php என்ற இணைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் ஐஜேஎம் (இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்) இணைந்து வழங்குகிறது.