

தமிழ்நாடு போலீஸ் அகாடமி முன்னர் போலீஸ் பயிற்சிக்கல்லூரிக்கு கீழ் இருந்தது. தற்போது போலீஸ் அகாடமி இயக்குனர் அந்தஸ்த்துடன் தனி அமைப்பாக செயல்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு போலீஸ் அகாடமி உருவாக்கப்பட்டது. எஸ்.எஸ்.ஐ யிலிருந்து உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வுக்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கான 9 வார பயிற்சியும், நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வானவர்களுக்கான ஓராண்டு பயிற்சியும்,
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் (கேட்டகிரி-1) டிஎஸ்பிக்களுக்கான ஓராண்டு பயிற்சியும், ஐபிஎஸ் தேர்வு முடிந்து தமிழக கேடர்களாக வருபவர்களுக்கான தமிழக ஏஎஸ்பிக்களாக நியமிக்கப்படும் முன் 5 வாரகால முன்பயிற்சி அனைத்தும் ஊனமஞ்சேரியில் உள்ள போலீஸ் அகடாமியில் அளிக்கப்படுகிறது.
இதுதவிர புத்தாக்க பயிற்சிகள், மூன்று மாத கம்ப்யூட்டர் பயிற்சி, கஸ்டம்ஸ், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கும் முக்கிய பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் காவலர் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி அந்தந்த மாவட்டங்களிலும், அஷோக் நகரிலுள்ள காவலர் பயிற்சிக்கல்லூரியிலும் நடக்கும். இவை அனைத்தும் காவலர் பயிற்சிக்கல்லூரியின் கீழ் வரும். அதற்கு டிஜிபி அந்தஸ்தில் அதிகாரி உள்ளார். தற்போது கரன்சின்ஹா காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக உள்ளார்.
இவருக்கு கீழ் போலீஸ் அகாடமி வரும். போலீஸ் அகாடமிக்கு திட்ட அதிகாரி என கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் ஒரு அதிகாரியும்,ஐஜி, டிஐஜி, எஸ்.பி தகுதியில் அதிகாரிகளும் உள்ளார். தற்போது அம்ரேஷ் புஜாரி போலீஸ் அகாடமியின் கூடுதல் டிஜிபியாக உள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு போலீஸ் அகாடமியை லஞ்ச ஒழிப்புத்துறை போல் இயக்குனர் அந்தஸ்துடன் அமைப்பாக மாற்ற டிஜிபி அரசுக்கு பரிந்துரைத்தார். அதன் படி தமிழக அரசு புது உத்தரவு ஒன்றை இன்று போட்டுள்ளது. இனி போலீஸ் அகாடமி காவலர் பயிற்சிக்கல்லூரி டிஜிபியின் கீழ் வராது. அது தனி அமைப்பாகவும், இது தனி அமைப்பாகவும் இயங்கும்.
போலீஸ் அகாடமியின் திட்ட அதிகாரி இனி போலீஸ் அகடாமியின் இயக்குனர் என்று அழைக்கப்படுவார். தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்த்தில் அதிகாரி உள்ளார். அவர் இனி இயக்குனர் போலீஸ் அகாடமி என அழைக்கப்படுவார்.
அவருக்கு கீழ் ஐஜி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி கூடுதல் இயக்குனர் போலீஸ் அகாடமி என்றும், டிஐஜி அந்தஸ்து அதிகாரி இணை இயக்குனர் போலீஸ் அகாடமி, எஸ்பி அந்தஸ்து அதிகாரி துணை இயக்குனர் போலீஸ் அகாடமி எனவும் அழைக்கப்படுவர்.
போலீஸ் அகாடமியில் இனி அனைத்து பயிற்சிகளும் இவர்கள் அதிகாரத்தின் கீழ் தனியாக செயல்படும். இதன் முதல் இயக்குனர் என்ற பெருமையை கூடுதல் டிஜிபி அம்ரேஷ் புஜாரி பெறுகிறார்.