

கரோனா ஊரடங்கால் 5 மாதமாக மலர் விற்பனை மந்தமாக நடந்து வந்த தோவாளை மலர் சந்தை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று களைகட்டியது. வெளியூர்களில் இருந்து அதிக அளவில் பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டு வியாபாரம் நடந்தது.
தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தின் பெரும்பகுதி மலர் தேவையை பூர்த்தி செய்வதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை முக்கிய பங்காற்றுகிறது.
திருமணம், மற்றும் கோயில் விழாக்கள் நடைபெறாத நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தோவாளையில் மலர் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பெயரளவிற்கு குறைந்த அளவில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் கேரளாவில் ஓணம் சீஸன் துவங்க இருப்பதால் அத்தப்பூ கோலத்திற்கான பூக்கள் விற்பனை நேற்று முன்தினத்தில் இருந்து ஓரளவு நடந்தது.
இதனால் தோவாளை மலர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். விநாயகர் சதுர்த்திக்கும் ஊரடங்கால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சதுர்த்தி பூஜைக்கான பூ விற்பனையும் எதிர்பார்த்த அளவு இருக்குமா? என்ற சந்தேகத்துடனயே வியாபாரம் நடந்தது.
ஆனால் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி பூஜை வைப்பதற்காக பூக்கள் வாங்குவதற்கு நேற்று அதிகாலையில் இருந்தே தோவாளை மலர் சந்தையில் பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர். இதனால் 5 மாதத்திற்கு பின்னர் அதிகமானோர் பூக்கள் வாங்க நேற்று அதிகமானோர் வந்திருந்ததுடன் தோவாளை மலர் சந்தையும் களைகட்டியது.
முந்தைய தினமும் ஓரளவு வியாபாரம் இருந்ததால் பூ வியாபாரிகள் பெங்களூரு, உதகை, கொடைக்கானல், சத்தியமங்கலம், மதுரை, அருப்புக்கோட்டை, சேலம் உட்பட வெளியூர்களில் இருந்து பூஜைக்கான பூக்களை கூடுதலாக கொள்முதல் செய்திருந்தனர்.
பூக்களை வாங்க அதிகமானோர் கூடியதால் வியாபாரிகளின் நம்பிக்கை கைகொடுத்தது. வெகு நாட்களுக்கு பின்னர் வெளியூர்களில் இருந்து கிரேந்தி, அரளி, மல்லிகை, ரோஜா போன்ற பூக்கள் 30 டன்னிற்கு மேல் கூடுதலாக தோவாளை சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்தன.
மல்லிகை, பிச்சி, கிரேந்தி போன்ற பூக்களும், விநாயகர் பூஜைக்கான அருகம்புல்லும் விரைவாக விற்று தீர்ந்தன. தேவை அதிகமாக இருந்ததால் பூக்களின் விலையும் இரட்டிப்பானது. பிச்சிப்பூ கிலை ரூ.625க்கு விற்பனை ஆனது. மல்லிகை கிலோ ரூ.500, கிரேந்தி ரூ.100, ஓசூர் கிரேந்தி 60, செவ்வந்தி 260, அரளி 220, வடாமல்லி 50, கோழிக்கொண்டை 100, அருகம்புல் 30 என விற்பனை ஆனது. உள்ளூர் மொத்த வியாபாரிகள் விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு விற்பனை செய்வதற்காக பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
கடந்த ஆண்டை போல் வியாபாரம் இல்லை என்றாலும், வெகு நாட்களுக்கு பின்னர் தோவாளை மலர் சந்தை களைகட்டியிருந்ததால் மலர் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் ஓணத்திற்கான பூவை கொள்ளுதல் செய்யவும் கேரள வியாபாரிகள் வருவர் என்ற எதிர்பார்ப்பு மலர் வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது