

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நிவாரண நிதி வழங்கக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்று சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 5 மாதங்களாக தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், அதன் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஊதியமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.10 ஆயிரம் வீதமும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மூலம் மாதம் ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து திருச்சியில் பல்வேறு தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், நலச் சங்க மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்றும் (ஆக.21) போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியரின் பழைய அலுவலகம் செல்லும் சாலையில் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் வீரமுத்து, 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறுகையில், "கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் கடந்த 5 மாதங்களாக அதன் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழிலாளர்கள் ஊதியமின்றி வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர். வேறு தொழில் தெரியாத நிலையில், திடீரென வேறு வேலைக்குச் செல்ல வழியின்றி குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அரசும், ரூ.5,000 வீதம் பேருந்து உரிமையாளர்களும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து நிவாரணம் பெற்றுத் தருவதாக தொழிலாளர் நலத் துறையில் உறுதி அளித்திருந்தனர். ஆனால், இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் பலன் இல்லாததால், நிவாரண நிதி வழங்கக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம்" என்றார்.