Published : 21 Aug 2020 03:55 PM
Last Updated : 21 Aug 2020 03:55 PM

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 250 படுக்கைகள் கொண்ட கோவிட் உள்நோயாளிகள் பிரிவு தொடக்கம்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பார்வையிடும் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 250 படுக்கைகள் கொண்ட கோவிட் உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 250 படுக்கைகள் கொண்ட கோவிட் உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதனை இன்று (ஆக.21) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக, விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு முதல்வரால் மார்ச் 27 அன்று ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டவர் 2 மற்றும் டவர் 3-ல் பிரத்யேகமாக கோவிட் சிகிக்சை மையம் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் உட்பட 500 படுக்கை வசதிகள், 100 வென்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் உள்ளன.

மேலும், கூடுதல் ஆக்சிஜன் தேவையை சமாளிக்க 20 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் தொட்டி இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும் ஒவ்வொரு கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் 835 கியூபிக் மீட்டர் வாயு நிலை ஆக்சிஜனாக மாறக்கூடிய தன்மை வாய்ந்தது.

இதனால், எவ்வித தங்கு தடையுமின்றி தேவைப்படும் அளவுக்குக் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.

250 மருத்துவர்கள், 400 செவிலியர்கள், 400 மருத்துவம் சார்ந்த பணியாளர்களுடன் சிறப்பாக செயல்படும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கோவிட் சிகிச்சை மையத்தின் மூலம் இதுவரை புறநோயாளிகளாக 21 ஆயிரம் நபர்களும், உள்நோயாளிகளாக 15 ஆயிரத்து 100 நபர்களும் சிகிச்சை பெற்று 13 ஆயிரத்து 600 நபர்கள் குணமடைந்துள்ளனர் (90%). இதுவரை 18 ஆயிரத்து 200 ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனைகளும், 10 ஆயிரத்து 500 சி.டி.ஸ்கேனும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகிறது"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x