

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாத குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், உதயன், பிஜின் குட்டி, மனோஜ் சமி, ஜம்சீர் அலி, தீபு, சந்தோஷ், சதீசன், விந்தின் ஜாய் ஆகிய 8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கரோனா காலத்தால் விசாரணைக்குக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை அடுத்து இன்று (ஆக.21) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு சயான் மற்றும் மனோஜ் ஆஜராயினர். மற்ற 8 பேர் ஆஜராகவில்லை. அவர்களுக்காக வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை.
இதனால், நீதிபதி பி.வடமலை 8 பேருக்கும் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்கள் உட்பட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சயான், "பணத்துக்காக வழக்கை முறையாக விசாரிக்காமல், அவசரகதியில் முடிக்க முற்படுகின்றனர். கோடநாடு வழக்கில் சீவன் மற்றும் அவரது தம்பிக்கு தொடர்பு உள்ளது" என கூறினார்.