

நாகப்பட்டினம், செல்லூர் சுனாமிக் குடியிருப்பில் ஆதியன் சமுதாயப் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கமும், ஆவின் பால் கொள்முதல் நிலையமும் இன்று திறக்கப்பட்டது.
செல்லூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் ஆதியன் பழங்குடி இன மக்கள் தங்கள் பழைய தொழிலான பூம்பூம் மாடு வைத்துக் குறி சொல்லும் தொழிலைக் கைவிட்டு வேறு தொழிலுக்குத் திரும்பி இருக்கின்றனர். அவர்கள் போதிய வருவாய் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த சூழலில் கரோனாவும் சேர்ந்து கொண்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வந்தனர்.
இதனையறிந்த சிக்கல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் தங்க கதிரவன் தனது சங்கத்தின் மூலமாக ஆதியன் இன மக்கள் 50 பேருக்குக் கூட்டுறவுக் கடன் மூலம் கறவை மாடுகளை வாங்கித் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதில் முதல் கட்டமாக 13 கறவை மாடுகள் வாங்கப்பட்டு பதிமூன்று குடும்பங்களிடம் கடந்த வாரம் ஒப்படைக் கப்பட்டது. மீதம் உள்ளவர்களுக்கும் விரைவில் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கறவை மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்யவும், அவர்களுக்கு ஒரு கூட்டுறவுச் சங்கத்தைத் தொடங்கவும் அதிகாரிகளால் வழிகாட்டப்பட்டது. அதனடிப்படையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது. தஞ்சை ஆவின் நிறுவனத்துடன் பேசி, பால் கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை ஏற்று ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் நிலையம் அமைக்க முன்வந்தது.
இதனையடுத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தொடக்க விழாவும், தஞ்சை ஆவின் நிறுவனத்தாரால் பால் கொள்முதல் செய்யும் நிகழ்ச்சியும் இன்று செல்லூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார். தங்க கதிரவன் முன்னிலையில் தஞ்சை ஆவின் தலைவர் ஆர்.காந்தி பால் கொள்முதலைத் தொடங்கி வைத்தார்.