Published : 21 Aug 2020 07:31 AM
Last Updated : 21 Aug 2020 07:31 AM

எம்ஜிஆருக்கு சிம்மசொப்பனமாக இருந்த ரகுமான்கான்: திமுகவின் இடி முழக்கம் ஓய்ந்தது

சென்னை

திமுகவை அண்ணா தொடங்கிய பிறகு, அதில் மாணவராக அடியெடுத்து வைத்தவர் ரகுமான்கான். சென்னை சட்டக் கல்லூரியில் துரைமுருகன், முரசொலி செல்வம் உள்ளிட்டோருடன் இணைந்து ரகுமான்கான் நடத்திய போராட்டம் அரசியலில் அவரை உயரத்துக்கு கொண்டு சென்றது.

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார் ரகுமான்கான். இதன்மூலம் கருணாநிதியின் மனதில் இடம்பிடித்தார்.

இந்தி எதிர்ப்பின் ஒரு பகுதியாக நடந்த சட்டநகல் எரிப்பு போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார். ரகுமான்கானின் மேடைப் பேச்சில் இலக்கியமும், உலக வரலாறும் அருவியாகக் கொட்டும். அவரது வார்த்தை வீச்சில் வந்து விழும் புள்ளிவிவரங்கள் எதிரிகளை தெறிக்கவிடும்.

1977 முதல் 1988 வரை அவர் எம்எல்ஏவாக இருந்தபோது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது.

தொடர்ந்து தேர்தல்களில் வென்று எம்ஜிஆர் புகழின் உச்சியில் இருந்த காலகட்டம். அப்போது ரகுமான்கான், துரைமுருகன், க.சுப்பு ஆகிய மூவரும்சட்டப்பேரவையில் தங்களதுபேச்சாற்றலால் எம்ஜிஆர் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அமைச்சர்களை நோக்கிமூவரும் வீசிய கேள்விக் கணைகளால் அரசுக்கு பலநேரங்களில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.

ரகுமான்கான், துரைமுருகன், க.சுப்பு மூவரும் திமுகவின் இடி, மின்னல், மழை என்று அழைக்கப்பட்டனர். அதில் இடிமுழக்கமாக முழங்கிய ரகுமான்கான், எம்ஜிஆர் அரசுக்கு சட்டப்பேரவையில் சிம்மசொப்பனமாக விளங்கினார். 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவை கட்டுக்கோப்புடன் கருணாநிதி வழிநடத்த, ரகுமான்கான் போன்ற தளபதிகளே காரணம்.

பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்த காலகட்டத்தில், முஸ்லிம்களிடம் திமுகவுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போது முஸ்லிம் சமூக தலைவர்கள், அமைப்புகளிடம் திமுக தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி எதிர்ப்பு உணர்வை தணித்தார் ரகுமான்கான்.

2001-க்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபடாவிட்டாலும் திமுகவின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தவறாமல் வந்து விடுவார். கருணாநிதியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்தார். அவரது மறைவு திமுகவுக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x