Published : 21 Aug 2020 07:25 AM
Last Updated : 21 Aug 2020 07:25 AM

அதிமுகவை உரசிப்பார்க்க வேண்டாம்: எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை

அதிமுகவையோ, அதிமுக அரசையோ உரசிப் பார்க்க வேண்டாம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, மக்களை பாதுகாப்பது அரசின் கடமை. அந்த அடிப்படையிலேயே அரசுதிட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. நிரந்தர தீர்வு ஏற்படும் வரை நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தரம் ஆய்வு செய்யப்பட்ட பிறகே அரசு சார்பில் முகக் கவசம் வழங்கப்படுகிறது. தரமற்றவை வழங்கப்படும் இடத்தை சுட்டிக்காட்டினால் ஆய்வுசெய்ய தயாராக உள்ளோம்.

விநாயகர் சிலை விவகாரத்தில் தமிழக அரசை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சிக்கிறார். ராஜாவின் வலிமை பற்றி எல்லோருக்கும் தெரியும். ட்விட்டரில் பதிவு போட்டுவிட்டு, ஓடி ஒளிந்துகொண்டு, நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டவர். காங்கயம் காளைகள் போல ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி அதிமுக. எனவே, அதிமுகவையோ, அதிமுக அரசையோ உரசிப் பார்ப்பதோ, சோதனை செய்வதோ கூடாது.

விநாயகர் சிலை விவகாரத்தில் தடையை மீறுவோம் என்கிறார் பாஜக தலைவர் முருகன். அரசின் நடவடிக்கையில் உள்நோக்கம் இல்லை. அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

மதுரையை 2-வது தலைநகர் ஆக்குவதால் முன்னேற்றம், வளர்ச்சி கிடைக்கும் என்றால், உரிய நேரத்தில் அரசு முடிவு எடுக்கும். இது முதல்வர், துணை முதல்வர் அடங்கிய அமைச்சரவை எடுக்கவேண்டிய முடிவு. அதனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுவதுபோல, தேர்தலை முன்வைத்து அரசியல் நாடகம் ஆட அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x