Last Updated : 21 Aug, 2020 07:19 AM

 

Published : 21 Aug 2020 07:19 AM
Last Updated : 21 Aug 2020 07:19 AM

தமிழகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது; கட்டிட வழிகாட்டி மதிப்பீடு 20% உயர்வு: வீடு வாங்குவோருக்கு முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம் அதிகரிக்கும்

சென்னை

கட்டிடங்களுக்கு வாடகை நிர்ணயம் மற்றும் கட்டிடத்துடன் செய்யப்படும் பத்திரப் பதிவு ஆகியவற்றுக்கான கட்டிட வழிகாட்டி மதிப்பீட்டை பொதுப்பணித் துறை 20சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

கட்டிடத்துக்கான வழிகாட்டி மதிப்பு பொதுப்பணித் துறை தலைமை பொறியாளரால் ஆண்டுதோறும் நிர்ணயித்து வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், இன்னும் ஓராண்டுக்கான மதிப்பீட்டை பொதுப்பணித் துறை கட்டிடப் பிரிவு தலைமை பொறியாளர் எம்.ராஜமோகன் வெளியிட்டுள்ளார். இது கடந்த 16-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த வழிகாட்டி மதிப்பு, நிலத்துக்கானது அல்ல. கட்டிடங்களுக்கு மட்டுமானது. சென்னை மாநகராட்சி மற்றும் 32 கி.மீ. சுற்றளவு வரை 15 வகை யிலான கட்டிடங்களுக்கான மதிப்பில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை, ஈரோடு, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 15 வகை கட்டிடங்களுக்கு 15 சதவீதமும், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், தஞ்சை, திண்டுக்கல் மாநகராட்சிகள், நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கட்டிடங்களுக்கு 10 சதவீதமும், அனைத்து நகராட்சி பகுதிகளிலும் உள்ள கட்டிடங்களுக்கு 5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டிட வகை

சுமைதாங்கி கட்டுமான அமைப்பில், தேக்குமரம் பயன்படுத்தப்படும் கட்டிட வகையில், கான்கிரீட் தளத்துடன் கூடிய தரைதளத்துக்கு சதுர மீட்டருக்கு அதிகபட்சமாக ரூ.8,980, முதல்தளத்துக்கு ரூ.8,325, 2-ம் தளத்துக்கு ரூ.8,425, அடுத்தடுத்த தளத்துக்கு 2-ம் தள தொகையுடன் ரூ.127.90 கூடுதலாக சேர்க்க வேண்டும்.

மரம் மற்றும் செங்கல் (‘மெட்ராஸ் டெரஸ்’) மேல்தளம் கொண்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தின் தரை தளத்துக்கான மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.8,125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தளத்துக்கு ரூ.7,470, 2-ம் தளத்துக்கு ரூ.7,830, அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு சதுர மீட்டருக்கு கூடுதல் கட்டணமாக ரூ.127 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘மங்களூரு டைல்ஸ்’ ஓடு வேயப்பட்ட வீடுகளுக்கு சதுர மீட்டருக்கு ரூ.6,530 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல, இரும்பு, தகரம் வேயப்பட்ட வீடு என்றால் சதுர மீட்டருக்கு ரூ.5,210, சிமென்ட் ஷீட் வேயப்பட்ட கட்டிடத்துக்கு ரூ.5,075 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கான்கிரீட் கட்டுமானம்

அதேபோல், வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் (ஆர்சிசி) கட்டமைப்பு கட்டிடங்களுக்கு தேக்கு மரமாக இருந்தால் முதல்
தளத்துக்கு அதிகபட்சமாக ரூ.10,125, 2-ம் தளத்துக்கு ரூ.9,460, 2-வது தளத்துக்கு ரூ.9,590, 3-ம் தளத்துக்கு ரூ.9,730, அடுத்தடுத்த தளங்களுக்கு ரூ.130.90 கூடுதலாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கிடங்குகளுக்கு ரூ.7,400 முதல் ரூ.6,985 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரையில் பதிக்கப்படும் டைல்ஸ், கிரானைட், மொசைக், மார்பிள், ஆழ்துளை கிணறு, கிணறு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கும் தனித்தனியாக மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ‘பாத்டப்’ எனப்படும் குளியல் தொட்டி இருந்தால் அதற்கு ரூ.17,165 மதிப்பிடப்பட்டுள்ளது. பயணிக்கும் நபர்கள் அடிப்படையில், மின்தூக்கிக்கு ரூ.16 லட்சத்து 81 ஆயிரம் முதல் ரூ.25 லட்சத்து 87 ஆயிரம் வரை மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய கட்டுநர் சங்க தமிழக பிரிவு மாநில பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறும் போது, ‘‘தமிழகத்தில் தற்போது பணி இறுதி சான்றிதழ் பெறாத, குறைந்த அளவு வீடுகளை கொண்ட கட்டிடங்களில் வீடு வாங்கினால், பிரிக்கப்படாத பகுதிக்கான மதிப்பீட்டுடன், கட்டிடத்தின் மதிப்பீடும் சேர்த்து பத்திரப் பதிவு செய்ய வேண்டும். இதுதவிர, பழைய அடுக்குமாடி குடியிருப்பு, தனி வீடுகளுக்கும் கட்டிடத்தின் மதிப்பீடும் சேர்க்கப்படும். அவ்வாறு சேர்க்கப்படும்போது, கட்டிடத்தின் மதிப்பீடு 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பதால் தற்போதைய முத்திரைத் தாள், பதிவுக் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x