Published : 20 Aug 2020 10:02 PM
Last Updated : 20 Aug 2020 10:02 PM

60 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறும் சங்ககாலக் கூடழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம்

மதுரை

மதுரையில் 60 ஆண்களுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு டவுன்ஹால் ரோடு கூடழகர் பெருமாள் கோயில் தெப்பகுளம் மீட்கப்படுகிறது.
வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தைப் போல் வைகை ஆற்றில் இருந்து குழாய் மூலம் நிரந்தரமாகத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி பழையபடி கோயில் திருவிழாக்களைப் பாரம்பரிய முறைப்படி நடத்த இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கூடழகர் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்திலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவில் சங்க காலத்துக்கு முன்பே தோன்றிய பழம்பெருமையுடையது. வைணவ சான்றோர்களான ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இதுவாகும். முற்கால பாண்டியர்கள் பரம்பரையாக வழிபட்டும் திருப்பணிகள் செய்தும் வந்த தொன்மையைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பெரியாழ்வாரால் திருமால் ஒருவரே பரம்பொருள் என நிர்ணயம் செய்த தலமாகவும், திருப்பல்லாண்டு விளைந்த திருத்தலமாகவும் கூடுதல் சிறப்புப் பெறுகிறது. தற்போதும் மதுரை கூடலழகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். பழங்காலத்தில் இந்த கோயிலுக்குக் கூடுதல் அழகு சேர்ப்பதாக இங்குள்ள தெப்பக்குளம் இருந்தது.

சுமார் ஒன்றேகால் ஏக்கரில் இந்த தெப்பக்குளம் காணப்பட்டது. கோச்சடையில் இருந்து இந்த தெப்பகுளத்திற்குக் கால்வாய் வழியாக ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்துள்ளது. 1960-ம் ஆண்டு வரை, மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் போல் இந்தக் கோயிலிலும் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம், தண்ணீர் நிரம்பிய இந்த தெப்பக்குளத்தில் கோலாகலமாக நடந்துள்ளது. அதன் பிறகு இந்தக் கோயிலில் தண்ணீரில் தெப்ப உற்சவம் நடக்கவில்லை. நிலத்தில் தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. சாமி, மைய மண்டபத்தை மூன்று சுற்றிவந்து சென்றது. 1980-களில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை கோயில் நிர்வாகம் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட்டது.

அவர்கள், தெப்பக்குளத்தை சுற்றி நான்கு திசைகளிலும் 195 கடைகளை அமைத்து பல்வேறு வகையான வியாபாரங்கள் செய்தனர். இதைத் தொடர்ந்து தெப்பகுளத்திற்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது. தெப்பக்குளப் படிக்கட்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டன. மழைக் காலத்தில் மழைநீருடன் சாக்கடை நீரும் தெப்பக்குளத்திற்குள் சென்றது. 1980-க்குப் பிறகு தெப்பகுளத்திற்கு முற்றிலும் தண்ணீரே வரவில்லை. தற்போது பாரம்பரியமான இந்த கோயில் தெப்பக்குளத்தை மீட்கவும், முன்போல் குளத்தில் தண்ணீர் நிரப்பி தெப்ப உற்சவம் நடத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். உயர் நீதிமன்றமும், கடைகளைக் காலி செய்ய உத்தரவிட்டு தெப்பக்குளத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று முதல் கூடழகர் பெருமாள் கோயில் தெப்பகுளத்தைச் சுற்றிலும் உள்ள கடைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தெற்குப் பகுதியில் உள்ள 95 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக மேற்கு, வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் உள்ள கடைகளும் அகற்றப்பட உள்ளன.

இந்த தெப்பக்குளத்தை மீட்டு மாநகராட்சியுடன் இணைந்து வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தைப் போல் பராமரிக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் ராமச்சந்திரன் கூறியதாவது;

''கடைசியாக 1960-ம் ஆண்டில் தண்ணீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்துள்ளது. தெப்பக்குளத்தை சுற்றிலும் வணிக ரீதியான கடைகள் வந்தப்பிறகு தெப்பக்குளத்திற்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் வருவதும் தடைப்பட்டு தெப்பகுளம் அதன் அழகை இழந்துள்ளது. கடைகளை முழுமையாக அகற்றினால்தான் தெப்பக்குளத்தை மீட்க முடியும். இந்து அறநிலையத்துறை, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை போல் இந்த தெப்பக்குளத்தைப் பராமரிக்கவும், பழைய காலத்தைப் போல் திருவிழாக்களைப் பாரம்பரிய முறைப்படி நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

தெப்பக்குளத்தின் மைய மண்டபம் நல்ல நிலையிலே தற்போது வரை உள்ளது. அதனைப் பராமரித்து சுற்றுச்சுவர், படிகள் அமைக்கப்படுகின்றன. குளமும் நல்ல நிலையிலே உள்ளது. தெப்பக்குளத்திற்கு மீண்டும் கோச்சடையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது இயலாத காரியம். மாநகராட்சி நிர்வாகம், ஜங்ஷன் பகுதியில் கிடைக்கும் மழைநீரைக் கொண்டு வரலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால், மற்றொரு யோசனையும் இருக்கிறது. வைகை ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் இந்தத் தெப்பகுளத்திற்கு கொண்டு வரும் திட்டமும் இருக்கிறது.

தெப்பக்குளத்தை மீட்டு முடிந்தால் இந்த ஆண்டு தெப்ப உற்சவத்தை தண்ணீர் இருக்கும் இந்த குளத்திலே நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறோம். மீதமுள்ள 100 கடைகள், கட்டிடங்களாக இல்லை. தகரத்தை அடைத்துக் கடைகள் வைத்துள்ளனர். அதுவும் அகற்றப்பட்டு அடுத்து மாநகாட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து குளத்திற்குத் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்''.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x