Published : 20 Aug 2020 09:28 PM
Last Updated : 20 Aug 2020 09:28 PM

ஆன்லைன் வகுப்பால் மாணவர்கள் பாதிப்பு: பாடங்களை குறைத்து, மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆன்லைன் வகுப்புகளில் குறுக்கிடும் ஆபாச இணையதளம், மாணவர் கண்களுக்கு பாதிப்பு, அனைவருக்கும் ஆன்லைன் வசதி இல்லாததை காரணம் காட்டி தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் பாடங்களை குறைக்கவும், மாதாந்திர தேர்வுகளை ஒத்திவைக்கவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன் லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ஒரு வழக்கும்.

ஆன் லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், ஆன் லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஆன் லைன் வகுப்புகளுக்கு மத்திய - மாநில அரசுகள் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளன. ஆனால், ஆன் லைன் வகுப்புகள் நடக்கும் போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை, நாள் முழுவதும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாது.

ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசு, மாணவர்களை பாதிக்கும் ஆபாச இணைய தளங்களை தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. தொடர்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பதால் மாணவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்ற நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகள் திறக்க காட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஆன்லைன் வகுப்புகளை துவங்கும் முன் தமிழக அரசு எடுக்க தவறி விட்டது. ஆன்லைன் கல்வி முறையால் கிராமபுற மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் இருப்பது சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது.

கிராம புறங்களிலும் நூற்றுக்கு 44% பேரிடமும் நகரங்களில் 65% பேரிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளதால் இணையதள கல்வி அனைவருக்கும் சென்று சேருவதில்லை. நான்கு மணி நேர வகுப்புகள் நடத்தினாலும் அதன் பின் வழங்கப்படும் வீட்டு பாடங்களும் கம்ப்யூட்டர் மூலமே மாணவர்கள் செய்கின்றனர்.

எனவே அரசு பள்ளிகளை போல தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் நடத்த வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு இது சாத்தியமில்லை என தெரிவித்து, வகுப்புகளை குறைக்க வேண்டும், வீட்டுப்பாடத்தையும், பாடத்திட்டத்தையும் குறைக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறித்தினர். மேலும், மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில் வரும் ஆகஸ்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x