

தமிழகத்தில் இ-பாஸ் முறையை முழுமையாக நீக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் கார், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை உடனடியாகக் கைவிட வேண்டும். ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்கப்பட்ட சாலை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் வாகனத் தவணைகளுக்கு விதிக்கப்பட்ட வட்டி மற்றும் அபராதங்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பேட்ஜ் உரிமம் பெற்றுள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
காலாவதியான வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கு ஊரடங்கு முழு தளர்வு ஏற்படும்வரை அவகாசம் வழங்க வேண்டும். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாட்களைக் கணக்கில் கொண்டு வாகன காப்பீடு செலுத்துவதற்குக் கால நீட்டிப்பு செய்ய வேண்டும். அல்லது காப்பீடு நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட அனைத்து சுற்றுலா, கார், வேன், ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கச் செயலாளர் எம்.ரவீந்திரன், கிழக்கு வேன் நிறுத்த சங்கத் தலைவர் எஸ்.சண்முகராஜ், மேற்கு வேன், கார் நிறுத்த சங்கத் தலைவர் பிரகலாதன், அமைப்பாளர் தினேஷ்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர்.