

உயிருக்குப்போராடிய சிறுவனை மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் தேனிராஜன். இவரது 10 வயது மகன் கவுதம் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறிய அளவிலான ஸ்குருவை விழுங்கிவிட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். அது தொந்தரவு எதுவும் செய்யாததால் தானாகவே வெளியே வந்துவிடும் அன பெற்றோரும் அலட்சியமாக இருந்துவிட்டது.
சில நாட்கள் கழித்து இருமல், காய்ச்சலால் சிறுவன் அவதியடைந்ததால் பெற்றோர் அவனை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது சிறுவன் விழுங்கிய ஸ்குரு மூச்சுக்குழாயில் இருப்பது கண்டறியப்பட்டது. காய்ச்சல், இருமல் மேலும் அதிகமானதால் சிறுவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சிறுவன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தைகள் நலப்பிரிவு துறை இயக்குனர் டாக்டர் பாலசங்கர், பேராசிரியர் நந்தினி குப்புசாமி, மயக்க மருத்துவர்கள் செல்வகுமார், சந்தனக்குண்ணன், நுரையீரல் சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் பிரபாகரன், ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர், சிறுவனுக்கு சிகிச்சை அளித்து மூச்சுக்குழாயில் சிக்கிய ஸ்குருவை பிராங்காஸ்கோபி என்னும் கருவியின் மூலம் வெளியே எடுத்தனர். அந்த ஸ்குரு, 5 மி.மீ., அளவில் இருந்தது. தற்போது சிறுவன் உடல்நிலை குணமாகி வீட்டிற்கு திரும்பியுள்ளார். சிறுவனுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து விழுங்கிய ஸ்குருவை வெளியே எடுத்து மருத்துவக்குழுவினரை டீன் சங்குமணி பாராட்டினார்.